உலக முதலீட்டாளர் மாநாடு துவங்கியது: வானூர்தி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியீடு

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை காலை தொடங்கியது. 
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையம்.
உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் சென்னை வர்த்தக மையம்.

உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதன்கிழமை காலை தொடங்கியது. 

மாநாட்டை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019-ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

தமிழக அரசு இரண்டாவது முறையாக உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் தொடக்க விழா காலை 11 மணிக்கு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ரூ.3 லட்சம் கோடி இலக்கு: இன்று பிற்பகல் 2 மணிக்கு தமிழக தொழில் துறை தொடர்பாக பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்குகளும் நடக்கின்றன. 

மேலும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கொரியா நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன.

இதைத் தொடந்து இரண்டாவது நாள் மாநாடு வியாழக்கிழமை (24ம் தேதி) காலை 10 மணிக்கு சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்குடன் தொடங்குகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டின் மூலமாக சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கான முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையிலான காட்சி அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன. 

நிறைவு விழா: வரும் 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: நிறைவு விழாவின் போது, 90-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசுக்கும், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஒப்பந்தங்கள் செய்யப்படும். பெருந்தொழில்கள், சிறு-குறுந்தொழில்கள் தரப்பிலும் இத்தகைய ஒப்பந்தங்கள் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இரண்டு நாள் மாநாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com