ஜன.27 இல் பிரதமர் மதுரை வருகை : எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27)
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் பகுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
மதுரையில் பிரதமர் பங்கேற்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் பகுதியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.


மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 27) அடிக்கல் நாட்டுகிறார். மதுரையை அடுத்த தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.1,264 கோடியை மத்திய அரசு அண்மையில் ஒதுக்கீடு செய்தது. இதைத் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார். 
இவ் விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக, தில்லியில் இருந்து விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை புறப்படும் பிரதமர், மதுரை விமான நிலையத்துக்கு காலை 11.15-க்கு வந்து சேருகிறார். பின்னர் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடமான சுற்றுச்சாலை பகுதியில் உள்ள மண்டேலா நகருக்கு காலை 11.30-க்குச் செல்கிறார். அங்கு அடிக்கல் நாட்டு விழா பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் அதேபகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசுகிறார். பகல் 12.05 முதல் 12.55 வரை பொதுக் 
கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் மதுரை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி செல்கிறார்.
பிரதமரின் மதுரை வருகையையொட்டி மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமையில் அனைத்துத் துறை முதன்மை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறையினரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்திய ஆட்சியர், உடனடியாகப் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் ச.நடராஜன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். விழா நடைபெறும் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com