ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல்: காவல் உதவி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை செய்தனர்.


சென்னையில் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை செய்தனர்.
சென்னை பெருநகர காவல்துறையின் தேனாம்பேட்டை உதவி ஆணையராக கடந்த 2017 ஜூலையில் இருந்து 2018 மே மாதம் வரை சி.எஸ்.முத்தழகு பணியில் இருந்தார். அப்போது தேனாம்பேட்டையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ரௌடி ராக்கெட் ராஜா உள்பட 5 பேரை போலீஸார் கடந்த மே மாதத்தில் கைது செய்தனர்.
இவ்வழக்கின் அடிப்படையில், சில நாள்களுக்குப் பின்னர் ராக்கெட் ராஜா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய பிரகாஷ் என்பவர், தன் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்கு உதவி ஆணையர் முத்தழகுவை தொடர்பு கொண்டு பேசினார்.
இதற்கு முத்தழகு ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக முத்தழகும், பிரகாஷூம் செல்லிடப்பேசியில் பேசும் 3 உரையாடல்கள் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது. இதில் முத்தழகு லஞ்சம் கேட்டு மிரட்டும் வகையில் பேசுவது இடம் பெற்றிருந்தது. 
இச்சம்பவத்தினால் முத்தழகு, கன்னியாகுமரி மாவட்டத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர், ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதேவேளையில் முத்தழகு மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை, உள்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. உள்துறை அனுமதி அளித்ததின்பேரில் முத்தழகு மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 11-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
வீட்டில் சோதனை: இந்த வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், போலீஸாரும் சென்னை அண்ணாநகரில் காவல் உதவி ஆணையர் குடியிருப்பில் உள்ள முத்தழகு வீட்டில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
காலை 7 மணியளவில் தொடங்கிய இச்சோதனை மாலை வரை நீடித்தது. பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் முத்தழகின் வங்கிக் கணக்கு, அவரது சொத்து விவரங்களையும் போலீஸார் சேகரித்தனர். அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீஸார் முத்தழகுவிடம் குரல் சோதனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com