
சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினமும் விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர் கென்ஜி ஹிரமட்சு தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடக்க விழாவில் அவர் பேசியது:-
சென்னையில் யமஹா உள்பட ஜப்பானைச் சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களும் ஆலைகளை நிறுவியுள்ளன. தொழில் துறை மட்டுமல்லாது, பல்வேறு உள்கட்டமைப்புத் துறைகளுக்கும் ஜப்பான் நிதியுதவிகளை அளித்து வருகிறது. சென்னை பொலிவுறு நகரத் திட்டம், மெட்ரோ ரயில் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள் ஆகியவற்றுக்கு கடனுதவிகளை அளித்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான தொழில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் ஜப்பான் ஆதரவு அளித்து வருகிறது. சென்னை-பெங்களூரு பசுமை வழித் தடம், சென்னை வெளிவட்டச் சாலை திட்டம் போன்றவற்றுக்கும் நிதிகளை அளித்துள்ளது.
இதுபோன்ற திட்டங்களைத் தொடர்ந்து, இப்போது போக்குவரத்து வசதிகளையும் மேம்படுத்த உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தினசரி விமான சேவையை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டம் வரும் அக்டோபரில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றார்.