
தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை-2019 ஐ மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பெறுகிறார்.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை பெற்று விளங்குவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை புதன்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியது:
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை பெற்று விளங்குகிறது. கடந்த 2000 முதல் 2018 வரை தமிழகத்துக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு 27 ஆயிரத்து 953 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதில், 75 சதவீதத்துக்கும் அதிகமான முதலீடுகள் கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்டதாகும்.
இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், மாநாட்டுக்கு முன்பாகவே அதை தாண்டியுள்ளோம்.
எங்களுடன் இணைந்து தமிழகத்தில் தொழில் ஆலைகளை நிறுவுவோருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமைந்துள்ளது. உங்களது கனவுகளை நிறைவேற்றும் கிரியாஊக்கிகளாக எங்களது அரசு திகழும். தமிழகம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் நாங்கள் பங்குதாரர்களாக இருப்போம்.
கடந்த 2015 செப்டம்பரில் நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ரூ.2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இவை 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் முதலீடுகளாக மாறும். எங்களது தொடர்ச்சியான கண்காணிப்புகளின் மூலமாக சில திட்டங்கள் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளன. பல நிறைவேறும் தருவாயில் உள்ளன.
மாநாட்டின் நோக்கம்: தமிழகத்தில் தொழில் முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுடன், அதிக முதலீடுகளை ஈர்ப்பதும் இம்மாநாட்டின் நோக்கம். இதன்மூலம் தொழில் துறையில் முன்னணி மாநிலம் என்ற நிலையை தமிழகம் தக்கவைத்துக் கொள்ளும். விரைவான பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நோக்கமாகக் கொண்டிருந்தார்.
கடந்த 30 ஆண்டுகளில் பிற மாநிலங்களைவிட தமிழகம் வலுவான, நீடித்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நாட்டில் இரண்டாவது பொருளாதார வலுமிக்க மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 8.4 சதவீதம்.
மிகை மின் உற்பத்தி: தொழில் ஆலைகளுக்கு அத்தியாவசியத் தேவை மின்சாரம். மின்சார உற்பத்தித் துறையில் கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழகம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது, மின்பற்றாக்குறையை முழுமையாகப் போக்கி, மிகை மின் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
சூரிய மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை, நெடுஞ்சாலைத் துறைகளிலும் பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் உற்பத்தித் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. ஜவுளி, தோல் தொழில், ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள், கனரக உற்பத்தித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த துறைகள், சுகாதாரத் துறை ஆகியவற்றிலும் தமிழகம் முதன்மை பெற்று வருகிறது.
வானூர்தி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி: தமிழகத்தில் தொழில் தொடங்குவதை எளிமையாக்கும் வகையில், தமிழ்நாடு வணிக எளிமையாக்குதல் சட்டம் 2018 நடை
முறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தொழில் தொடங்குவதற்கான அனுமதிகள் ஒற்றைச் சாளர முறையில் 30 நாள்களில் அளிக்கப்படுகின்றன. இதற்கு தமிழக தொழில் வர்த்தக அமைப்புகள் மிகுந்த வரவேற்பை அளித்துள்ளன.
முதலீட்டாளர் மாநாட்டு தொடக்க விழாவில், வெளியிடப்பட்ட வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கொள்கையின் அடிப்படையில், ஏற்கெனவே 35 நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத் திறன்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனம் வானூர்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்திக்கான ஆலையை அமைத்து வருகிறது. இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்படும் சுகாய் விமானத்தின் டயர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய எம்ஆர்எப் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது என்றார் முதல்வர் பழனிசாமி.
முன்னதாக, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், மாநாடு குறித்த விளக்க உரையாற்றினார். மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஃபோர்டு, ஹூண்டாய், மகேந்திரா அன்ட் மகேந்திரா, டிவிஎஸ் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில் ஸ்மார்ட் போன் ஆலை
1992-ஆம் ஆண்டு தொழில் கொள்கையின் மூலமாக, ஃபோர்டு, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் ஆலைகளை அமைத்தன. மின்னணு உற்பத்தித் துறையை ஊக்குவிக்க 2003-இல் அதற்கான கொள்கை வெளியிடப்பட்டது. இதன்மூலம், மின்னணு உற்பத்தித் துறையின் கேந்திரமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதைத் தொடர்ந்து, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம், ஸ்மார்ட் செல்லிடப்பேசி தயாரிப்புக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் பழனிசாமி.