
பரமத்தியில் நடைபெற்ற அ.ம.மு.க. கூட்டத்தில் பேசும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்.
எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க தான் வெற்றி பெறும் என்று அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியது:
அம்மாவின் ஆட்சி என்று சொல்லிக் கொள்ளும் இப்போதைய ஆட்சியாளர்கள் அ.ம.மு.க. என்று சொன்னாலே அச்சப்படுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு பின் எங்களைப் பார்த்து அஞ்சுகிறது. திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். ஆனால், அங்கு இடைத்தேர்தல் அறிவித்தபோது ஆளும்கட்சி மட்டுமல்லாது, தி.மு.க.வினரும் நீதிமன்றப் படியேறி இடைத்தேர்தலை தடுத்து நிறுத்தினர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வராகக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்த செம்மலை தற்போது கொடநாடு விவகாரத்தில் அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.
கொடநாடு விவகாரத்தில் முதல்வர் ஏன் பதற்றப்படுகிறார். சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைக்கும் அரசு, கொடநாடு விவகாரத்தை ஏன் பரிந்துரைக்கக் கூடாது? விரைவில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் மற்றும் மக்களவைத் பொதுத் தேர்தல்கள் வர உள்ளன.
ஆர்.கே. நகரில் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். திருவாரூரில் தேர்தல் நடந்திருந்தால் அ.ம.மு.க. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கும்.
இனி எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. தான் வெற்றி பெறும் என்றார்.
கூட்டத்தில், அவைத் தலைவர் அன்பழகன், பொருளாளர் ரெங்கசாமி, தலைமை நிலையச் செயலாளர் பழனியப்பன், கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்செல்வன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேட்டி: பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்களவைத் தேர்தல் தொடர்பான தொகுதி பங்கீட்டுக் குழுவை தேவை வரும்போது அறிவிப்போம். மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். முடிவு வந்தவுடன் நிச்சயமாகக் கூறுகிறேன்.
மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்தால் நல்லது என்றார்.
பின்னர் அவர், அ.தி.மு.க, பா.ஜ.க தேர்தல் கூட்டணி குறித்து பதில் அளித்த போது, தேர்தல் வந்தால் அ.தி.மு.க. மூழ்கும் கப்பல். அதில் யார் ஏறினாலும் மூழ்குவார்கள் என்றார்.