
கொடநாடு வழக்கில் சயன், மனோஜ் ஆகியோரை ஜனவரி 29 ஆம் தேதி நேரில் ஆஜராக உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இதில், கேரளத்தை சேர்ந்த சயன், மனோஜ் ஆகியோர் தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் தில்லியில் வெளியிட்ட ஆவணப்படத்துக்கு அளித்திருந்த பேட்டியில் கொடநாடு சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளதாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, உதகை நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் நந்தகுமார் தாக்கல் செய்த மனுவில், சயன், மனோஜ் ஆகியோர் ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் இத்தகைய தகவல்களால் இவ்வழக்கில் தொடர்புடைய பிற சாட்சிகள் கலைய வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் இருவரின் ஜாமீனையும் ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி வடமலை முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய சயன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து சயன், மனோஜ் ஆகியோர் ஜனவரி 29ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.