
சித்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திருத்தணியை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது: ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள எலிகரம் கிராஸ் பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரின் மீது பின்னால் வந்த இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். உயிரிழந்தவர்களின் சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டைகளை வைத்து அவர்கள் 3 பேரும் தமிழகத்தின் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த விஜேஷ் (21), திருமலை (19) மற்றும் முரளி (21) என்று தெரிய வந்தது என போலீஸார் தெரிவித்தனர்.