கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்: திருநாவுக்கரசர் வேண்டுகோள் 

தமிழகமெங்கும் வரும் குடியசுத் தினத்தன்று நடைபெற உள்ள கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் தவறாமல்  கலந்து கொள்ளுங்கள் என்று, கட்சியினருக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள். 
கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்: திருநாவுக்கரசர் வேண்டுகோள் 

சென்னை: தமிழகமெங்கும் வரும் குடியசுத் தினத்தன்று நடைபெற உள்ள கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் தவறாமல்  கலந்து கொள்ளுங்கள் என்று, கட்சியினருக்கு காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய-மாநில அரசுகளுக்கு இணையாக மக்களுக்கே அதிகாரம் அளிக்கும் வகையில் அமரர் ராஜீவ் காந்தி கண்ட கனவிற்கேற்ப 73 ஆவது சட்டத் திருத்தத்தின்படி பஞ்சாயத்து ராஜ் மசோதா நிறைவேற்றப்பட்டு 1993 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிவுற்றபோதிலும், தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.  ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டுமென பஞ்சாயத்து ராஜ் சட்டம் கூறுகிறது.  ஆனால் நீதிமன்றம் தலையிட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமெனக் கூறிய பின்பும், தமிழகத்தில் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.  

கிராம மக்களுக்கு சுயாட்சி பெற்ற அமைப்பாக பஞ்சாயத்து ராஜ் உருவாக்கப்பட வேண்டுமென்பது மகாத்மா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் கண்ட கனவாகும். இந்தக் கனவுகளை நிறைவேற்ற பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடித்தளமாக இருப்பது கிராம  சபைகளாகும். தமிழகத்தில் கிராம சபைகளை செயல்பட விடாமல் ஆளுங்கட்சியினர் தடுத்து வருகின்றனர். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான  அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படாமல் அதிமுக அரசு மக்களை வஞ்சித்து வருகிறது. வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவது சட்டத்தின்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.   ஆகவே, மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் ஜனவரி 26 ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்த வேண்டும்.

எனவே, ஜனவரி 26 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை தமிழகம் முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பிரிவுகளின் மாநிலத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள், ஆகியோர் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com