அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகளுக்கான புதிய விதிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு முறையில் மாற்றம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் புதிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும்
அண்ணா பல்கலைக்கழக அரியர் தேர்வுகளுக்கான புதிய விதிமுறை விரைவில் அறிவிக்கப்படும்: அண்ணா பல்கலைக்கழகம்


சென்னை: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு முறையில் மாற்றம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் புதிய விதிமுறைகள் குறித்து அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் பருவத் தேர்வில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது. அந்த புதிய நடைமுறையின்படி ஒரு பருவத்தேர்வில் தோல்வியடையும் பாடத்துக்கான மறுத்தேர்வை இரண்டாவது பருவத்தேர்வில் எழுத முடியாது, மூன்றாவது பருவத்தேர்வில் தான் எழுத முடியும்.மேலும் மூன்று மறுத்தேர்வுகள் மட்டுமே எழுத முடியும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போன்று இறுதி பருவத்தேர்வு அல்லது அதற்கு முந்தைய பருவத்தேர்வில் தோல்வியடைந்தால் அந்த பாடங்களை எப்போது எழுதி தேர்ச்சி பெறுவது என்பது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படுவதுடன், கல்லூரி படிப்பை முடித்த உடன் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த புதிய நடைமுறைகளை ரத்து செய்வதுடன் இந்த நடைமுறைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 19 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த புதிய நடைமுறையால் மறுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வாய்ப்புகளை பல்கலைக்கழகம் குறைத்துவிட்டது. படிப்பை முடித்த பிறகு மறுத்தேர்வை உடனடியாக எழுத முடியாததால் பணிக்குச் செல்லும் வாய்ப்பிலும் பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த நடைமுறையால், ஏற்கெனவே மோசமாக உள்ள பொறியியல் பட்டதாரிகளின் நிலை இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என வாதிடப்பட்டது. 

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேர்வு முறை பற்றிய மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் அவர்களது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com