Enable Javscript for better performance
அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை அழைத்துப் பேச வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

  

  அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை அழைத்துப் பேச வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு 

  By DIN  |   Published on : 29th January 2019 03:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  strike

   

  சென்னை: அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை அழைத்துப் பேச வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஜனவரி 31 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள்  வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  அரசு ஊழியர் - ஆசிரியர் கோரிக்கைகளுக்காகவும், எதிர்கால சந்ததியினரின் வேலைவாய்ப்புக்காகவும் களத்தில் நிற்கும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினை அழைத்துப்பேச தமிழக அரசு மறுத்து வருவது அநீதியானது. இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாவதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும்; 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும்; இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்; சத்துணவு மையங்கள், அரசுப்பள்ளிகளை மூடுவது - இணைப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்;                அரசு அலுவலகங்களில் - பள்ளிகளில் உள்ள காலியிடங்களை பூர்த்தி செய்யாமல் அவுட்சோர்சிங் மூலம் வெட்டிச்சுருக்க வகை செய்யும் அரசாணைகளை ரத்து செய்திட வேண்டும்; உள்ளிட்ட கோரிக்கைகள் முக்கியமானவையாக முன் வைக்கப்பட்டுள்ளன.

  நியாயமான  கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்த முன்வராமல் போராடும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அச்சுறுத்துவது, போராட்டத்தை சீர்குலைப்பது, நள்ளிரவு வரை உணவு, குடிநீர், மின்சாரம் அற்ற சூழலில் கைது செய்து வைத்திருப்பது, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவது, பெண் ஆசிரியர் உட்பட போராட்டக்காரர்களை இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்வது, பள்ளி மட்டங்களில் ஆளுங்கட்சியின் அதிகாரமிக்கோர் நேரடியாக மிரட்டுவது, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது, போராடுபவர்களை இடைநீக்கம் செய்வது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் தான் அரசு இறங்கியிருக்கிறது.

  சுமார் 3000க்கும் மேற்பட்டுள்ள ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள், பெண்கள் உட்பட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அடக்குமுறையினால் போராட்டங்களை கட்டுப்படுத்தியதாக வரலாறு இல்லை என்பது ஆளும் அதிமுகவிற்கு நன்கு தெரிந்த பாடம் தான். இருப்பினும், அதே பாதையில் தொடர்வதை அனுமதிக்க முடியாது.

  இவ்வளவு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் போராட்டம் தொடர்வது மட்டுமல்ல, வேறு பல அமைப்புகளும் போராட்டங்களில் இணைய முடிவெடுத்திருக்கிறார்கள். அடக்குமுறைக்கு அடிபணியாமல் போராடும் ஆசிரியர் - அரசு ஊழியர்களுக்கு  வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதோடு, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பை உடனடியாக அழைத்துப் பேச வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், பணியிடங்களை காலியிடங்களாக அறிவித்து புதியவர்களைக் கொண்டு நிரப்புவது கைவிடப்பட  வேண்டுமென வலியுறுத்தியும் 31.01.2019 அன்று மாவட்ட தலைநகர்களில் சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்-எல்)லிபரேசன், எஸ்.யு.சி.ஐ.(சி) ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து பகுதி மக்களும் பேராதரவு அளிக்க வேண்டுகிறோம்.

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai