ஏரியை தூர்த்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் முதல்வர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?: இந்தியக் கம்யூனிஸ்ட்  கேள்வி 

ஏரியை தூர்த்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் முதல்வர் பழனிசாமி மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஏரியை தூர்த்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் முதல்வர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?: இந்தியக் கம்யூனிஸ்ட்  கேள்வி 

சென்னை: ஏரியை தூர்த்து அடுக்குமாடி கட்டிடம் கட்டும் முதல்வர் பழனிசாமி மீது உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளதாவது:

நீர்நிலைஆக்கிரமிப்பு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்று நீதியரசர்கள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு புதனன்று விசாரணைக்கு வந்தபோது, 'நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது என்று பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென' உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்திரவிட்டுள்ளது.

நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உயர்நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதை உணர முடிகின்றது. நீதிமன்ற உத்திரவை அமுல்படுத்திட வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு உண்டு. அரசே ஆக்கிரமீப்பு செய்தால் அதனை என்னவென்று சொல்வது?

சேலம் மாநகர் அருகில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான சேலத்தாம்பட்டி ஏரி. பன்னெடுங்காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வரும் ஏரியாகும். சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பெரும் பயன்பாட்டில் இருந்து வரும் ஏரியாகும். அத்தகைய புகழ்மிக்க 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை தூற்று, அடுக்கு மாடி குடியிருப்பை கட்டுவதற்கான ஏற்பாட்டை, தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.

கடந்த 18.11.2018 ல் ஏரியை தூற்று குடியிருப்பை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சேலம் மாவட்ட ஆட்சிதலைவர் தலைமையில் மாண்புமிகு முதலமைச்சர் கே.பழனிச்சாமி அவர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை என அனைத்து அதிகாரிகளும் பங்கு பெற்றுள்ளனர்.

பொதுமக்கள் ஏரியை தூர்த்த கூடாது என போராடினார்கள். போராடும் பொதுமக்களை காவல்துறை துணையோடு அடக்கி அச்சுறுத்தி நூற்றுக்கணக்கான லாரிகளில் இருந்து மண் கொண்டு வரப்பட்டு, 300 ஏக்கர் பரப்பளவு ஏரி, தூர்த்தப்பட்டு கட்டிடம் கட்டுவதற்கான பணிகளும் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகின்றது.

300 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை பாதுகாக்க வேண்டிய முதலமைச்சரும் மாவட்ட ஆட்சி தலைவரும் முன் நின்று தூர்த்து வருகின்றார்கள்.

இவர்களின் மீது உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்குமா? அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுமா? உயர்நீதிமன்ற உத்தரவு சாதாரண மக்களுக்குதானா? அரசுக்கு பொருந்தாதா? என்ற கேள்வி எழுகின்றது.

உயர்நீதிமன்றம் சேலத்தாம்பட்டி ஏரி தூர்க்கப்படுவதை தடுத்து நிறுத்தி ஏரியை பாதுகாக்கவும், தூர்த்து போக காரணமாக இருந்த சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com