
சென்னை மாநகரப் போக்குரவரத்துக் கழகம் திங்கள்கிழமை (ஜூலை 1) அதிகாலை முதல் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளனர்.
பேருந்துகள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டது. இதனால் பணிக்குச் செல்வோர் மாற்று போக்குவரத்து வசதியின்றி அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் அதிகளவில் காத்திருக்கின்றனர்.
ஜூன் மாத ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்து பணிமனை ஊழியர்களும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மாநகரப் பேருந்து ஊழியர்களுக்கு திங்கள்கிழமை இரவுக்குள் முழு ஊதியமும் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
முறையான ஊதியம் வழங்கப்பட்டால் உடனடியாக பணிக்கு திரும்புவதாக மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தெரிவித்தனர்.