Enable Javscript for better performance
கானல் நீராகும் காவிரி நீர்!- Dinamani

சுடச்சுட

    
    KABINIDAM

    பெங்களூரு: வழக்கம்போல் கர்நாடகமும், தமிழகமும் காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக புதிய மோதலைத் தொடங்கியுள்ளன. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பது கானல் நீராகி விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
     தமிழகத்தின் காவிரி ஆற்றுப் படுகையில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து வழக்கம்போல் ஜூன் 12-இல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று விவசாயிகள் காத்திருந்து, ஏமாற்றம் அடைந்தனர்.
     சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெறும் 43.72 அடியாக உள்ளது. அணையில் 14.09 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 236 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
     அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இல்லாததால், நீர்ப்பாசனத்துக்கான கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
     டெல்டா பகுதியில் பொய்த்த மழை: டெல்டா மாவட்டங்களில் மழை எதுவும் பெய்யாததால், காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ள ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீண்டும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
     ஜூன் மாதத்துக்கான தண்ணீர் திறக்கப்படவில்லை?
     காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பின்படி, காவிரியில் இருந்து ஆண்டுக்கு மொத்தம் 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
     இந்தத் தண்ணீரை மாதவாரியாகத் திறந்துவிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி., ஜூலை மாதத்தில் 31.05 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், ஜூன் 23-ஆம் தேதி வரையில் 1.885 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்துவிட்டுள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
     இதனிடையே, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்களுக்கான 40.24 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர்மேலாண்மை ஆணையம் ஜூன் 25-இல் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தண்ணீரை கர்நாடகத்தால் திறந்துவிட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
     கர்நாடகத்தில் கால தாமதமான பருவமழை!
     மழைக்கு தென்மேற்குப் பருவமழையை நம்பியுள்ள கர்நாடகத்துக்கு ஜூன் 5-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 22-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை வந்து சேர்ந்துள்ளது. காவிரி ஆற்றின் தோற்றுவாயாகத் திகழும் குடகு மாவட்டத்தில் வழக்கத்தைவிட மழை குறைவாகப் பெய்துள்ளது.
     மலைநாடு பகுதியில் ஜூன் 1 முதல் 28-ஆம் தேதி வரையில் 316 மி.மீ. மழைக்குப் பதிலாக 172 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.
     இந்தக் காலகட்டத்தில் குடகு மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பலவீனமாக உள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது.
     வழக்கத்தைவிட குடகு மாவட்டத்தில் இம்முறை 50 சதவீத மழை மட்டுமே பெய்துள்ளது. குடகு மட்டுல்லாது, மைசூரு, வயநாடு, மண்டியா, தும்கூரு மாவட்டங்களிலும் போதுமான மழை பெய்யாததால், காவிரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளுக்கு நீர்வரத்து போதுமானதாக இல்லை. இதைச் சுட்டிக்காட்டித்தான், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் கூறி வருகிறது.
     கர்நாடக அணைகளின் நிலை:
     ஜூன் 28-ஆம் தேதி நிலவரப்படி, 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 79.77 அடியாகவும், 2,284 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,257.48 அடியாகவும், 2,922 அடி உயரமுள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,864.71 அடியாகவும், 2,859 அடி உயரமுள்ள ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,807.49 அடியாகவும் உள்ளது.
     கடந்த ஆண்டில் இதேநாளில் நீர்மட்டம், கிருஷ்ணராஜ சாகர் அணையில் 105.63 அடி, கபினி அணையில் 2,282.35 அடி, ஹேமாவதி அணையில் 2,903.91 அடி, ஹாரங்கி அணையில் 2,842.68 அடியாக இருந்தது. 104.55 டிஎம்சி கொள்ளளவுத் திறன் கொண்ட கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி,ஹாரங்கி அணைகளில் கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 62.75 டி.எம்.சி.யாக இருந்த தண்ணீர் இருப்பு, நிகழாண்டின் அதே நாளில் மொத்தம் 13.73 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.
     கர்நாடக விவசாயத்துக்கே தண்ணீர் திறக்கப்படவில்லை?
     நீர்ப்பாசனத்தைக் காட்டிலும், பெங்களூரு, மைசூரு, மண்டியா மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்குவது முக்கியம் என்று கர்நாடக அரசு கருதுகிறது. நிலுவைப் பயிர்களைக் காப்பாற்ற பாசனக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடும்படி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு இணங்காமல் கர்நாடக அரசு மெளனம் சாதித்துள்ளது.
     போதுமான மழை இல்லாததால், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்தில் 50 ஆயிரம் ஹெக்டேருக்குப் பதிலாக 35 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். மண்டியா, மைசூரு, குடகு மாவட்டங்களில் நிலுவை நெற்பயிருக்கு பாசன நீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
     இந்த நிலையில், தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்வதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தண்ணீர் திறந்துவிடுவது நடைமுறை சாத்தியமில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

    நீர் வருமா?, வராதா?
     வழக்கமான மழை பெய்தால் மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தண்ணீர் திறந்து விடலாம் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள கர்நாடக விவசாயிகள் சங்கத்தினர், தற்போதைய நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
     4 அணைகளுக்கும் போதுமான நீர்வரத்து இல்லாமல், காவிரி ஆற்றில் தமிழகத்துக்குத் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
     வழக்கம்போல, நிகழ் நீர் ஆண்டிலும் தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கானல் நீராகவே மாறிவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.
     - ந.முத்துமணி
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai