
சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி, கடலூரில் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இவற்றில் சில கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களால் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், சாதாரண வலையைப் பயன்படுத்தும் மீனவர்களுக்கு போதுமான மீன்கள் கிடைக்காததால் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்த தகராறில் சோனங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் பஞ்சநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மீனவர்களை எச்சரித்து வந்தது.
கடந்த ஜூன் 15-ஆம் தேதி மீன்பிடி தடைக்காலம் நிறைவையடுத்து மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க ஆயத்தமாகி வந்தனர். அப்போது, சுருக்குமடி வலைகளைக் கொண்டு சென்ற 5 லாரிகளை மீன்வளத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கு தேவனாம்பட்டினம் பகுதி மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, துறைமுகம் முகத்துவாரத்தில் தங்களது படகுகளை மறித்து நிறுத்தி மற்ற படகுகள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தினர். இவர்களிடம் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
அப்போது, இந்த பிரச்னைக்கு ஜூன் 30-ஆம் தேதிக்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். பறிமுதல் செய்த சுருக்குமடி வலைகளை மீண்டும் ஒப்படைப்பதுடன், அந்த வலைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், பேச்சுவார்த்தை நடத்தப்படாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் கருப்புக் கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வீடு, படகுகளில் கருப்புக்கொடிகளைக் கட்டினர்.
இவர்களிடம் கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பறிமுதல் செய்யப்பட்ட வலைகள் திரும்ப ஒப்படைக்கப்படுமென போலீஸார் உறுதி அளித்ததாகவும், அதனால் போராட்டத்தை விலக்கிக் கொண்டதாகவும் மீனவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
தொடர்ந்து மாலையில் மீன்வளத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் மீன்வளத் துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், மாவட்ட துணை இயக்குநர் ரேணுகா, உதவி இயக்குநர் ரம்யா, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், முடிவு எட்டப்படவில்லை. எனினும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சுருக்குமடி வலை பயன்பாட்டை எதிர்க்கும் மீனவ கிராமத்தினர், இந்த வலையை மீண்டும் பயன்படுத்த அனுமதித்தால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.