
கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு தேசிய அளவில் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கடலூரில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. இதற்கான தேர்வுகள் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்பதால், தாய்மொழியில் படித்தவர்களால் தேர்வாக முடியாது.
காங்கிரஸ் கட்சிக்கு மொழி வேற்றுமை கிடையாது என்றபோதிலும், தாய்மொழிக் கல்வி வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரே நாடு, ஒரே மொழி என்ற கொள்கையை பாஜகவினர் கடைப்பிடித்து வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போன்ற உறுதியான மனப்பான்மை தற்போதைய ஆட்சியாளர்களிடம் இல்லாததால், அவர்கள் மாநில நலனுக்காக முடிவெடுப்பதில் திணறுகின்றனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்றபோதிலும், அதுகுறித்து தற்போது விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்களின் என்ன கருத்து கூறுகிறார்கள் என்பதை ஏற்க வேண்டும்.
அரசியல்வாதிகளின் கருத்து முக்கியமல்ல. மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பயன்பெறாத திட்டமெனில் அதைக் கைவிட வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திமுக அறிவித்துள்ள போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
கராத்தே தியாகராஜன் மீது கட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது எனது பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டதுதான்.
கட்சிக்குள் பேசி முடிவு எடுத்த பிறகே கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றியும் பெற்றோம். அதன்பிறகு அதுகுறித்து பேசுவது ஏற்புடையதல்ல.
கட்சிக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கட்சித் தலைமை எனக்கு அளித்துள்ளது.
குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு தங்களது சக்தியை விரயமாக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்தார்கள். ஆனால், நான் அதுபோன்ற அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றார் அவர்.
பேட்டியின் போது, கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.குமார் உடனிருந்தார்.