15 நாள்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்

திட்டமிட்டப்படி எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் தொடங்குகிறது.
15 நாள்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது: எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்

திட்டமிட்டப்படி எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திங்கள்கிழமை (ஜூலை 1) முதல் தொடங்குகிறது. மேலும், தென் மாநிலங்களில் 15 நாள்களுக்கு எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படாது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 நாமக்கல்லில், அச்சங்கத்தின் தலைவர் எம்.பொன்னம்பலம், செயலாளர் என்.ஆர்.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
 தென் மாநிலங்களில் 53 எரிவாயு நிரப்பும் பாட்டிலிங் பிளாண்ட்டுகளுக்கு டேங்கர் லாரிகளைப் பயன்படுத்தி வருகிறோம். 2018 - 2023- ஆம் ஆண்டுகளுக்கான டெண்டர் ஒப்பந்தத்தின்போது, கடந்த 30 ஆண்டுகளாக இருந்த நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்தன. 2017 மார்ச் மாதம் புதிய விதிமுறைகளுடன் எண்ணெய் நிறுவனங்கள் டெண்டர் அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய டேங்கர் லாரிகளை வாங்கினர்.
 ஆனால், ஒன்பது மாதங்கள் கழித்து 2018 ஜனவரியில் தான் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கால தாமதம் ஏற்பட்டதால் 2 ஆயிரம் வாகனங்கள் காத்திருப்பில் இருந்தன. தொடர்ந்து 2018 செப்டம்பரில் இறுதி டெண்டர் நிறைவேற்றப்பட்டு, மொத்தமாக 4,800 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மீதமுள்ள 700 வாகனங்கள் காத்திருப்பில் இருந்தன. வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்த நிலையில் 8 மாதங்களாக அது தொடர்பான அறிவிப்பில்லை.
 தற்போது, எண்ணெய் நிறுவனங்களையோ, பொதுமக்களையோ பாதிக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடவில்லை. புதிய விதிமுறைகள் என்னவென்று தெரியாததாலேயே பல உறுப்பினர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்களது கோரிக்கைகளை அந் நிறுவனங்கள் ஏற்காததால், இக்கட்டான சூழ்நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம். தென் மாநிலங்களில் எரிவாயுத் தட்டுப்பாடு என்பது இன்னும் 15 நாள்களுக்கு இருக்காது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். மொத்தமுள்ள 53 பாட்டிலிங் பிளாண்ட்டுகளிலும் எரிவாயுவை இறக்குவதற்கு டேங்கர் லாரிகள் தயாராக உள்ளன. எங்களது வேலைநிறுத்தத்தைப் பொருத்தவரை, எரிவாயுவை லாரிகளில் நிரப்பும் இடத்திலே தான் தவிர, அவற்றைப் பாட்டிலிங் பிளாண்ட்டுகளில் இறக்கும் இடத்தில் இல்லை.
 இந்தப் பிரச்னையை எண்ணெய் நிறுவனங்கள் சுமூகமாகத் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கையில், வேலைநிறுத்தத்தை திங்கள்கிழமை காலை 6 மணி முதல் தொடங்குகிறோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. எங்களது வழக்குரைஞர்கள் மூலமாகவும் நாங்கள் கோரிக்கையை எடுத்துரைப்போம். இருப்பினும், நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். தென் மண்டலத்துக்குள்பட்ட தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், 500 லாரிகள் எரிவாயு நிரப்பும் பணியை திங்கள்கிழமை முதல் புறக்கணிக்கின்றன. இதனால் நாள் ஒன்றுக்கு, டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.2.50 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com