
வெப்பச்சலனம் மற்றும் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 1) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் மற்றும் பருவமழை காரணமாக, சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஜூலை 1) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
6 இடங்களில் வெயில் சதம்:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 6 இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, மதுரையில் 102 டிகிரியும், சென்னை, கடலூர், பரங்கிபேட்டை, நாகப்பட்டினம், கரூர் பரமத்தியில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.