சுடச்சுட

    

    ஆறுமுகசாமி ஆணைய விசாரணை: மேலும் 4 வாரங்களுக்கு தடை நீட்டிப்பு

    By DIN  |   Published on : 02nd July 2019 01:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arumugasamy


    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    இது தொடர்பான மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா ஆஜராகி, இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். 
    இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நான்கு வாரம் அவகாசம் வழங்கினர். இதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டனர்.
    பின்னணி: ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசும், ஆறுமுகசாமி ஆணையமும் , வி.கே. சசிகலாவும் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கும் தடை விதிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai