சுடச்சுட

  

  ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

  By DIN  |   Published on : 02nd July 2019 08:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ops


  தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

  கடந்த 2017-ஆம் ஆண்டு, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தது. இந்த வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 10 பேர் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், சபாநாயகர் ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

  அரசுக்கு எதிராக செயல்பட்டதாக டிடிவி தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  

  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 11 எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது, அவருடைய முடிவே இறுதியானது என்று தீர்ப்பளித்தது.

  இந்த உத்தரவுக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த 
  வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணி ஓய்வு பெற்றதால், இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் வருகிறது. 

  இந்நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென, திமுக கொறடா மற்றும் அண்மையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது. 

  மேலும் வழக்கை விசாரிக்க புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இந்த நிலையில், இந்த வழக்கு நாளையே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai