சுடச்சுட

  

  போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிடும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

  By DIN  |   Published on : 02nd July 2019 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mrv


  போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
  சட்டப்பேரவையில் திங்கள்கிழமை, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து திமுக உறுப்பினர் கே.என்.நேரு பேசியது:
   போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் சென்னை முழுவதும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால், 1 கோடிக்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் தராததால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மேலும், திமுக ஆட்சியில்கூட போக்குவரத்து ஊழியர்களை 12 மணி நேரம் வேலை செய்யக் கூறியுள்ளோம். அப்படிச் செய்பவர்களுக்கு மறுநாள் விடுப்பு எடுக்க அனுமதித்தோம். இப்போது அதுபோல் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த முறையை மாற்றக் கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எனவே, போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தைக் கொடுத்து பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று பேசினார். இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸும் பேசினார். 
  அதற்கு, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பதில்:
  சென்னை முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று திமுக உறுப்பினர் கூறினார். அது தவறான தகவல். சென்னையில் மொத்தம் 33 பணிமனைகள் உள்ளன. இதில், 12  பணிமனைகளில் இருந்து 100 சதவீதம் பேருந்துகள் இயங்குகின்றன. 10 பணிமனைகளில் இருந்து 90 சதவீதம் பேருந்துகள் இயங்குகின்றன. 5 பணிமனைகளில் இருந்து 50 சதவீதம் பேருந்துகள் இயங்குகின்றன. 6 பணிமனைகளில் இருந்துதான் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
  இதுவும் சில தொழிற்சங்கங்களின் தூண்டுதலின்பேரில்தான் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஊதியம் வழங்கப்படவில்லை. திங்கள்கிழமை (ஜூலை 1) இரவுக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். அதுவும் ஊதியத்தில் பாதிதான் தரப்படும் என்று வதந்தி கிளப்பி விடுகின்றனர். இதுவும் தவறானது. முழுமையாக ஊதியம் வழங்கப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai