சுடச்சுட

  

  மருத்துவர்கள் விரைவில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்

  By DIN  |   Published on : 02nd July 2019 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் மருத்துவர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளும் முறை விரைவில் அறிமுகமாகவுள்ளதாக அந்தக் கவுன்சிலின் தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்தார்.
   மாநிலத்தில் தற்போது 60 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் உள்ளன. தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபாரை எடுத்துக் கொண்டால், ஏறத்தாழ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். அவர்களில் 90 ஆயிரம் மருத்துவர்கள் மருத்துவச் சேவையாற்றி வருகின்றனர்.
  பொதுவாக, மருத்துவப் பணிகளில் ஈடுபடுவதற்கு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதன்படி, தற்போது உள்ள 1 லட்சம் மருத்துவர்களும் அதில் பதிவு பெற்றவர்களாவர்.
  தற்போதைய சூழலில், புதிய மருத்துவர்கள், கவுன்சிலில் பதிவு செய்ய நேரடியாக விண்ணப்பித்து ஆவணங்களை தாக்கல் செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
  இந்நிலையில், வருங்காலங்களில் ஆன்லைன் மூலமாகவே மருத்துவர்கள் பதிவு செய்யும் முறையைக் கொண்டு வர மருத்துவக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதற்கான சிறப்பு மென்பொருள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்த 3 மாதங்களில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.
  மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் எந்த நேரம் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்? அவர்கள் எவ்வளவு கட்டணம் பெறுகிறார்கள்? என்பன போன்ற தகவல்களை இணையதளத்தில் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai