சுடச்சுட

  

  மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் தொமுச சண்முகம், வழக்குரைஞர் வில்சன்

  By DIN  |   Published on : 02nd July 2019 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sanmugam

  மாநிலங்களவைத் தேர்தலுக்கான திமுகவின் வேட்பாளர்களாக தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகத்தையும்,  வழக்குரைஞர் பி.வில்சனையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  மாநிலங்களவைத் தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக 3 இடங்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதில், ஓரிடத்தை மதிமுகவுக்கு திமுக ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. மீதமுள்ள 2  இடங்களிலும் திமுகவின் சார்பிலேயே வேட்பாளரை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  தொமுச சண்முகம்: திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொமுச பேரவையின் பொதுச் செயலாளராக மு. சண்முகம் (77) இருந்து வருகிறார்.  தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பட்டவர்த்தி  எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். 1961-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து 11 ஆண்டுகள் பணியாற்றி 1972-இல் விருப்ப ஓய்வு பெற்றவர். நெருக்கடி நிலை காலத்துக்குப் பிறகு, பணி நிமித்தம் காரணமாக சென்னையில் குடியேறினார். 
  தொழிற்சங்கத் தலைவராக விளங்கிய திருவொற்றியூர் மா.வெ.நாராயணசாமி, தொமுச பேரவைத் தலைவர் செ.குப்புசாமி ஆகியோருடன் இணைந்து தொழிற்சங்கப் பணியில் 1977-ஆம் ஆண்டிலிருந்து ஈடுபட்டு வருகிறார்.  தொமுச பேரவையில் செயலாளராக 11 ஆண்டுகள் பணியாற்றி, பின் பொருளாளராக 8 ஆண்டுகள், அதற்கு பின்னர் 2001 முதல் இன்று வரை பேரவை பொதுச் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். பல்வேறு தொழிற்சங்கப் போராட்டங்களில் முன்னிலை வகித்துள்ளார். 
  வழக்குரைஞர் வில்சன்: வழக்குரைஞர் பி.வில்சன் (56) சென்னையில் பிறந்தவர். பி.எஸ்சி., பி.எல். சட்டப்படிப்பை சென்னை சட்டக் கல்லூரியில் படித்தார். 1989-இல் பார் கவுன்சிலில் இணைந்தார். தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக 2008 முதல் 2011 வரை பணியாற்றினார். 
  திமுக சார்பில் பல்வேறு வழக்குகளில் வாதாடி வெற்றி தேடித் தந்தார்.  கருணாநிதியின் உடலை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கிலும் வாதாடி வெற்றிபெற்றவர். 
  அதிமுகவுக்கு 3 இடங்கள்: மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவைப் போல அதிமுகவும் 3 இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிமுகவின் வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட உள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai