அண்ணா பல்கலை. நடவடிக்கைக்கு ஆளான 92 பொறியியல் கல்லூரிகள் பட்டியலை வெளியிட வேண்டும்: முதல்வரின் தனிப் பிரிவில் மனு

உள்கட்டமைப்பு வசதி குறைபாடு காரணமாக, அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கைக்கு ஆளான 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரின் தனிப்


உள்கட்டமைப்பு வசதி குறைபாடு காரணமாக, அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கைக்கு ஆளான 92 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரின் தனிப் பிரிவுக்கு அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு வசதி குறைபாடு, தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லாதது போன்ற காரணங்களால் 92 பொறியியல் கல்லூரிகளில் பி.இ. இடங்களின் எண்ணிக்கையை 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைத்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது. 
பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் நலன் கருதி, இந்த நடவடிக்கைக்கு உள்ளான 92 கல்லூரிகளின் பெயர்களைத் தெரிவிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், அண்ணா பல்கலைக்கழகத்திடம் கடந்த மே 16-ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது.
இதற்கு பதில் தராத பல்கலைக்கழகம், மொத்தமாக தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டும், நிகழாண்டிலும் இடம்பெற்றிருக்கக் கூடிய பி.இ. இடங்களின் விவரங்களை வெளியிட்டது.  
இதனால், இந்தப் பட்டியலில் இருந்து நடவடிக்கைக்குள்ளான 92 கல்லூரிகளை மாணவர்கள் அலசி ஆராய்ந்து அறியும் சூழல் உருவானது.
இதற்கிடையே,  அகில இந்திய தனியார் கல்லூரி ஊழியர் சங்க நிறுவனர் கே.எம்.கார்த்திக் சார்பில் முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு ஒன்று திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 
அதில், மாணவர்களின் நலன் கருதி இந்த 92 கல்லூரிகளின் பட்டியலை தனியாக பல்கலைக்கழகம் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மறுப்பு: இதனிடையே, பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகள் விவரம் என 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவின. 
இதை மறுத்த அண்ணா பல்கலைக்கழகம், நடவடிக்கைக்கு ஆளான கல்லூரிகளின் தனிப் பட்டியல் எதையும் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என விளக்கம் தெரிவித்தது. 
அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைவுக் கல்லூரிகளில் இதுபோன்று தரமற்ற கல்லூரிகள், தரமான கல்லூரிகள் என்று பாகுபாடு செய்யவில்லை. 
89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்று பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com