புதுவை ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்பு: பேரவையில் திமுக வெளிநடப்பு

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை
சட்டப்பேரவையிலிருந்து வெளியேறும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையிலிருந்து வெளியேறும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின்.


புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
 அதேசமயம், குடிநீர் பிரச்னை தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு குடிநீர் தட்டுப்பாடு குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அளித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து பல்வேறு பிரச்னைகளை எழுப்பிய அவர், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்த கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினார். 
அப்போது பத்திரிகை செய்தி ஒன்றை அவர் படித்துக் காண்பித்தார். இந்தச் செய்தியை ஒட்டி, சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்தார். அப்போது நடந்த விவாதம்:-
மு.க.ஸ்டாலின்: புதுச்சேரி ஆளுநர்  தனிப்பட்ட முறையில் என்னையோ, உங்களையோ விமர்சனம் செய்திருந்தால் அதைப் பற்றி கவலையில்லை. ஆனால், தமிழக மக்களை கேவலப்படுத்தி, கொச்சைப்படுத்தி, இன்னொரு மாநிலத்தின் ஆளுநர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
பேரவைத் தலைவர் தனபால்: பேரவை விதி 92-ன் கீழ் (7)-வது பிரிவின்படி, ஆளுநரைப் பற்றியோ, நீதிமன்றங்கள் குறித்தோ களங்கம் கற்பிக்கும் வகையில் பேசக் கூடாது என்று தெளிவாக உள்ளது. எனவே, ஆளுநர் குறித்து பேசுவதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின்: ஆளுநரை விமர்சித்துப் பேசவில்லை. ஆளுநர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதைத்தான் நான் சொல்கிறேன். 
ஆட்சியைப் பற்றியோ, அரசியல் கட்சிகளைப் பற்றியோ, அவர்கள் விமர்சனம் வைப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. 
ஒட்டுமொத்த தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள், சுயநலமிக்கவர்கள் என்று ஒரு ஆளுநர் பேசலாமா, இந்தப் பேரவை அதனை ஏற்றுக் கொள்கின்றதா?. அதுதான் என்னுடைய கேள்வி.
பேரவைத் தலைவர்: ஆளுநரை விமர்சிக்கக் கூடாது என்று விதி உள்ளது. இதைத் தவிர வேறு பிரச்னைகள் குறித்து விரிவாகப் பேசலாம். 
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: நீங்கள் (பேரவைத் தலைவர்) பேரவை விதியைக் கூறுகிறீர்கள். எங்களுக்கும் (திமுக), அவர்களுக்கும் (அதிமுக) மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். 
ஆனால், ஒட்டுமொத்தமாக தமிழர்களை கோழைகள் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு எல்லையைக் கடந்தால் ஆளுநரை விமர்சிக்க உரிமை உண்டு.
பேரவைத் தலைவர்: வெளியில் என்ன வேண்டுமானாலும், எவ்வளவும் பேசலாம். ஆனால், அவற்றை அவையில் அனுமதிக்க விரும்பவில்லை.
மு.க.ஸ்டாலின்: ஒரு ஆளுநராக இருந்து சொன்ன அந்தக் கருத்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே, ஆளும்கட்சியில் இருக்கின்றவர்களைப் பொருத்தவரையில் ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். 
அதனால், இதை கண்டிக்கக்கூடிய வகையில் எங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பேரவைக்கு வந்த திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com