மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறையே தொடரும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறையே தொடரும்: முதல்வர் பழனிசாமி


சென்னை: தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறையே தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாட்டில் மருத்துவ பட்டப்படிப்பு பயில 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்பது தொடர்பாக அளித்த விளக்கம்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளதை தான் சொல்லியிருக்கிறார். எங்களை பொறுத்தவரைக்கும் மத்திய அரசு இதை கொடுத்திருக்கிறது. இதை அவைக்கு தெரிவிப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையிலே தான் தெரிவிக்கிறோமே தவிர, அதை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என்பது எல்லாம் கிடையாது. இன்றைக்கு கட்சிகளுடைய எண்ணங்களின் அடிப்படையிலே தான் அரசு செயல்படுத்தும். ஆகவே, அரசை பொறுத்தவரைக்கும் மத்திய அரசு இன்னென்ன திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சீட்டுகள் கொடுக்கிறோம் என்று சொல்லி ஒரு அறிக்கையை எல்லா மாநிலங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்கும் வந்திருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதில் என்னவென்றால், மொத்தம் 1000 இடங்கள் வந்தது என்று சொல்லியிருக்கிறார். அதில் 150 அகில இந்திய ஒதுக்கீடுக்கு போய்விடுகிறது. மீதி 850 இருக்கிறது.

இந்த 850-ல் 264 ஓபன் காம்படேஷன்க்கு போய்விடுகிறது. மீதி 586 இடங்கள், 69 சதவிகித இடஒதுக்கீட்டில் வரும் என்று சொல்கிறார்கள். இன்றைக்கு 586 இடங்கள் நம்முடைய இடஒதுக்கீட்டின் அடிப்படையிலே நீங்கள் நிறைவேற்றி கொள்ளலாம் என்ற கருத்தை அவர் தெரிவித்திருக்கின்றார். இதைத் தான் அவையினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றோம். இதை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து இதை என்ன செய்யலாம் என்று அனைவருடைய கருத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும். 

உறுப்பினர் பொன்முடி ஏதோ நாங்கள் ஏற்றுக் கொண்டதைப் போல சொல்வது எல்லாம் தவறான கருத்து. ஏனென்றால் இது அவை, பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் பதிவாகிறது.

பத்திரிகையில் வெளியில் போகும். ஆகவே, அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருக்கிறது. அந்த கடிதத்தை இன்றைக்கு அவையினுடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினுடைய தலைவர்களுக்கு எல்லாம் தெரிவிக்கின்ற அடிப்படையிலே மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆகவே, நம்முடைய அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடைய தலைவர்களை அழைத்து இது சம்பந்தமாக என்னென்ன கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்ற அந்த விவரத்தை எல்லாம் அவர்களிடத்திலே தெரிவித்து, அதில் ஒருமித்த கருத்து ஏற்பட்ட பிறகுதான் இதில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, எக்காரணத்தைக் கொண்டும் 69 சதவிகித இடஒதுக்கீட்டையே அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்பதை இந்த அவையின் வாயிலாக தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com