மின் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டதைப் போல் குடிநீர்ப் பிரச்னைக்கும் தீர்வு காண்போம்: எஸ்.பி.வேலுமணி

திமுக ஆட்சிக் காலத்தில் நிலவி வந்த மின்சார பற்றாக்குறையைப் போக்கியது போன்று, இப்போதுள்ள குடிநீர்ப் பிரச்னையையும் சமாளித்துத் தீர்வு காண்போம் என்று பேரவையில் உள்ளாட்சித் துறை
மின் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டதைப் போல் குடிநீர்ப் பிரச்னைக்கும் தீர்வு காண்போம்: எஸ்.பி.வேலுமணி


திமுக ஆட்சிக் காலத்தில் நிலவி வந்த மின்சார பற்றாக்குறையைப் போக்கியது போன்று, இப்போதுள்ள குடிநீர்ப் பிரச்னையையும் சமாளித்துத் தீர்வு காண்போம் என்று பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார்.
குடிநீர்ப் பிரச்னை தொடர்பாக, சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பதில்:-
தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை. குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 40 முதல் 45 ஆண்டுகளாக மரங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன. மரங்கள் அதிகளவு இருந்தால் நிலத்தடி நீர் கீழே போகாமல் தடுக்கப்படும். மழை நீரைச் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீரைச் செறிவூட்ட முடியும். இதனால், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், அவற்றைக் கண்காணிக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கடந்த 193 நாள்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ளவர்கள் குடிநீருக்காக அடுத்தடுத்து ஆன்லைனில் பதிவு செய்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கும் வழங்கி வருகிறோம். 
பிற மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரம் லாரிகள் வரை வரவழைத்து கூடுதலான நீரை கொடுக்கிறோம்.
கடந்த 3 ஆண்டுகளில் போதிய பருவமழை பெய்யாததால் 2017-ஆம் ஆண்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டது. கடுமையான வறட்சியிலும் சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 450 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இப்போதும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், 550 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னைக்கு தினமும் அளிக்கப்படுகிறது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்: சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் ஆதாரத்துக்கான ஏரிகளாக 10 ஏரிகள் கண்டறியப்பட்டன. அவற்றில் இரட்டை ஏரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளில் இருந்து நீரைச் சுத்திகரித்து குடிநீர் வழங்க ரூ.53 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், இப்போது ரெட்டேரியில் சுத்திரிகரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு நீர் பெறுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கழிவுநீர் மறு சுழற்சி மூலமாக தொழிற்சாலைகளுக்கு நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் முறை இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு கோயம்பேடு, கொடுங்கையூர் பகுதியில் தலா 45 மில்லியன் லிட்டர் திறனுடைய 3-ஆம் நிலை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி இந்த மாத (ஜூலை) இறுதியில் முடிவடையும்.
நீர்ப் பற்றாக்குறை: திமுக ஆட்சிக் காலத்தில் கடுமையான மின் பற்றாக்குறை நிலவியது. இதன்பின், அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த பற்றாக்குறை சரிசெய்யப்பட்டு மின்வெட்டில் இருந்து தமிழகம் மீட்கப்பட்டது. 
அதைப் போன்றே, குடிநீர் பிரச்னையையும் தமிழக அரசு எதிர்கொண்டு வெற்றி பெறும். எந்தவித துன்பத்துக்கும் ஆளாகாத வகையில் மக்களை அரசு காக்கும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com