
புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகை அருகே திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.
தமிழக மக்கள் குறித்து விமர்சனம் செய்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை அருகே திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவையுடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும் கூட காரணமாக உள்ளதாக தமிழக அரசையும், தமிழக மக்களையும் விமர்சனம் செய்து சமூக வலைதளத்தில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்ததுடன், கிரண் பேடி மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், கிரண் பேடியைக் கண்டித்து, புதுவை தெற்கு மாநில திமுக சார்பில், ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.
இதில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், திமுக தீர்மானக் குழுச் செயலருமான சபாபதி மோகன், புதுவை மாநில இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ், முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் அ.மு.சலீம், தேசியக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுவை பிரதேச குழுச் செயலர் ஆர்.ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் இரா.விஸ்வநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலர் தேவபொழிலன், மனிதநேய மக்கள் கட்சியின் பஷீர்அகமது, திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, மதிமுக மாநிலத் தலைவர் கபிரியேல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.