கேள்வி நேரத்தைச் சுருக்க முடியாது: திமுகவுக்கு பேரவைத் தலைவர் பதில்

சட்டப்பேரவையில் புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்பதால், கேள்வி நேரத்தை சுருக்க முடியாது என்று திமுகவுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் பதிலளித்தார்.
கேள்வி நேரத்தைச் சுருக்க முடியாது: திமுகவுக்கு பேரவைத் தலைவர் பதில்


சட்டப்பேரவையில் புதிய உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்பதால், கேள்வி நேரத்தை சுருக்க முடியாது என்று திமுகவுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதங்களில் 15 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டுமென காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை, பேரவைத் தலைவர் தனபால் கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது:
கேள்வி நேரத்தை காலை 10 முதல் 11 மணி வரை மட்டுமே நடத்தலாம். மீதமுள்ள கேள்விகளை மறுநாளைக்கு எடுக்கலாம். எனவே, கேள்வி நேரத்தை ஒரு மணி நேரத்தில் முடியுங்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது: 
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் நிறைய உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு கேள்வி நேரத்தின் போது துணைக் கேள்விகளை எழுப்புவதுதான். அதுவும் இல்லாவிட்டால் பேரவையில் பேச வாய்ப்பு கிடைக்காமல் போகும். தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்னைகளை துணைக் கேள்விகளின் மூலமே எழுப்புகிறார்கள். நேரத்தைக் குறைத்தால் துணைக் கேள்விகளை எழுப்ப முடியாத நிலை ஏற்படும் என்றார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், அப்படியென்றால் பேரவை தொடங்கும் நேரத்தை காலை 10 மணிக்குப் பதிலாக காலை 9.30 மணிக்கு மாற்றலாம். கேள்விகளையும், அமைச்சர்கள் அதற்கு அளிக்கும் பதில்களையும் சுருக்கமாக அளிக்க வேண்டும். கேள்வி- பதில் நேரத்தில் வர்ணனைகளை நிறுத்தினாலே நேரம் மிச்சமாகும் என்றார்.
துரைமுருகன் கருத்துக்கு பதிலளித்த பேரவைத் தலைவர் தனபால், பேரவைக்கு நிறைய உறுப்பினர்கள் புதிதாக வந்துள்ளனர். எனவே, அவர்களுக்கு வாய்ப்புத் தருவதன் அடிப்படையிலேயே துணைக் கேள்விகள் கொடுக்கப்படுகின்றன. கேள்வி, பதில்களை சுருக்கமாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை ஏற்கிறேன். அந்த முறையை அனைவரும் பின்பற்றி உறுப்பினர்கள் தங்களுக்கான வாய்ப்பினை பயன்படுத்தி எனக்கும் பேரவையை நடத்த ஒத்துழைப்புத் தர வேண்டும். அதே சமயம், பேரவை தொடங்கும் நேரத்தை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com