தகுதி வாய்ந்த, தகுதியில்லாத பேராசிரியர்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலை. அறிவுறுத்தல்

தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், தகுதியில்லாத பேராசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, இணைப்பு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
தகுதி வாய்ந்த, தகுதியில்லாத பேராசிரியர்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலை. அறிவுறுத்தல்


தகுதி வாய்ந்த பேராசிரியர்கள், தகுதியில்லாத பேராசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு, இணைப்பு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
கல்லூரிகளில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிறுத்தலின்படி தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை சென்னைப் பல்கலைக்கழகம் எடுத்துள்ளது.
உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக யுஜிசி அவ்வப்போது வழிகாட்டுதல்களை வெளியிட்டு வருகிறது. அதுபோல, கல்லூரி ஆசிரியர் கல்வித் தகுதிக்கான வழிகாட்டுதலை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. அதன்படி, பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர முதுநிலை பட்டப் படிப்புடன் தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வு (செட்) ஆகிய தேர்வுகளில் ஒன்றில் தகுதி பெற்றிருப்பது கட்டாயம். அல்லது முதுநிலை பட்டப் படிப்புடன் பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிப்பை முடித்திருக்க வேண்டும். 
ஆனால், சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள தனியார் சுயநிதி கலை-அறிவியல் கல்லூரிகளில் பெரும்பாலும் முதுநிலை பட்டப் படிப்பு மற்றும் முதுநிலை பட்டப் படிப்புடன் எம்.ஃபில். படிப்பு முடித்தவர்களே ஆசிரியர்களாக பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தபோதும், தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, தொடர்ந்து தகுதியில்லாத பேராசிரியர்களைக் கொண்டு தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், இதுதொடர்பாக, அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளித்த நீதிமன்றம், யுஜிசி வழிகாட்டுதலின் அடிப்படையில் தகுதி வாய்ந்த பேராசிரியர்களை மட்டுமே கல்லூரிகளில் பேராசிரியர்களாக நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 
அதுபோல, சென்னைப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் மீது நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமிகூறியது:
யுஜிசி வழிகாட்டுதலின் அடிப்படையில் பிஎச்.டி. அல்லது முதுநிலை பட்டப் படிப்புடன் நெட் அல்லது செட் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர் பணியில் நியமிக்க வேண்டும் என இணைப்புக் கல்லூரிகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. 
இந்த ஆண்டுக்குள்ளாக தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளோம்.
மேலும், தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர், தகுதியில்லாத பேராசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரத்தை அனைத்துக் கல்லூரிகளும் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.
இந்த விவரங்கள் கிடைத்ததும், அதனடிப்படையில் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com