விவசாய விளைபொருட்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதரவு விலை: மாநில காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள் 

விவசாய விளை பொருட்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்று   மத்திய அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாய விளைபொருட்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதரவு விலை: மாநில காங்கிரஸ் தலைவர் வேண்டுகோள் 

சென்னை: விவசாய விளை பொருட்களுக்கு சரியான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும் என்று   மத்திய அரசுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நேற்று பொருளாதார விவகார அமைச்சரவைக்குழு பிரதமர் தலைமையில் கூடி, விவசாயிகளின் 14 விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பார்த்த விவசாயிகள், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்த விலையின்படி ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2018-19 இல் ரூ.1750 வழங்கப்பட்டது, தற்போது ரூ.1815 வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 3.7 சதவீத உயர்வாகும். அதேபோல, நிலக்கடலைக்கு ரூ.4890 வழங்கப்பட்டது, தற்போது ரூ.5090 ஆக வழங்கப்பட்டுள்ளது. இது 4 சதவீத உயர்வாகும். இதேபோல, பருத்தி ரூ.5150 வழங்கப்பட்டது, தற்போது ரூ.5255 வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் 2 சதவீத உயர்வாகும். விவசாயிகளின் இடுபொருள் விலை மற்றும் உற்பத்திச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், விவசாயிகளை கலந்து பேசாமல் தன்னிச்சையாக மத்திய பா.ஜ.க. அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உற்பத்திச் செலவோடு, விவசாயிகளின் முதலீட்டிற்கு வட்டி, நிலத்திற்கு வாடகை மற்றும் விவசாயிகளின் உழைப்பிற்கான ஊதியம் ஆகியவற்றோடு, அதில் 50 சதவீதம் சேர்த்து தான் விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு உற்பத்திச் செலவை மட்டும் கணக்கில் கொண்டு, மற்றவற்றை புறக்கணித்து விட்டு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்குகிற வகையில் முடிவுகளை அறிவித்துள்ளது. 

விவசாயிகளின் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நெல்லுக்கு வழங்கப்பட்டதை விட 40 சதவீதம் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் நெல் ரூ1,100-க்கு விற்கப்பட்டுள்ளது. இது குறைந்தபட்ச ஆதரவு விலையை விட ரூ.550 குறைவாகும். இதை கொள்முதல் செய்வதற்கான எந்த கட்டமைப்பு வசதிகளையும் மத்திய அரசு செய்யாமல் குறைந்தபட்ச ஆதரவு விலையை வெறும் கவர்ச்சிகரமான அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. இதை இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்வதற்கு உரிய நிதியும் ஒதுக்கப்படவில்லை.

மொத்தம் 130.33 லட்சம் நிலப்பரப்பு கொண்ட தமிழகத்தில் சுமார் 78 லட்சம் ஹெக்டேரில் ஒரு காலத்தில் வேளாண்மை நடந்தது. ஆனால் தற்போது அது 37 லட்சம் ஹெக்டேராக சுருங்கி விட்டது. அதிலும் நெல் விவசாயம் என்பது 17 லட்சம் ஹெக்டேர்கள் என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பொன் விளைந்த பூமிகள் எல்லாம் வீட்டுமனைகளாக  மாறி, நகர்மயமாகி வருகிறது.

எனவே, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட விளை பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மிகமிக குறைவானதாகும். உற்பத்திச் செலவோடு மற்ற செலவுகளையும் சேர்த்து, அதில் 50 சதவீதம் கூடுதலாக கணக்கிட்டு, உரிய விலை வழங்க நரேந்திர மோடி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்படவில்லையெனில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அணிதிரண்டு கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com