தமிழ்ச்சமூகத்தின் மீது இந்திய வல்லாதிக்கம் காட்டி வரும் தொடர் வன்மம்: சீமான் கண்டனம்

தமிழ் சமூகத்தின் மீது இந்திய வல்லாதிக்கம்  தொடர்ச்சியாக வன்மம் காட்டி வருவதாக, தமிழில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் விவகாரததில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்   சீமான் கண்டனம்..
தமிழ்ச்சமூகத்தின் மீது இந்திய வல்லாதிக்கம் காட்டி வரும் தொடர் வன்மம்: சீமான் கண்டனம்

சென்னை: தமிழ் சமூகத்தின் மீது இந்திய வல்லாதிக்கம் தொடர்ச்சியாக வன்மம் காட்டி வருவதாக, தமிழில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் விவகாரததில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்   சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாழனன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்தியப்பெருநிலத்தின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னக மாநில மொழிகள் அடங்கியிருக்கிற இந்தப் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம் இல்லை என்கின்ற நிலை எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சட்டம், தீர்ப்பு தொடர்பான கலைச்சொற்கள் ஏற்கனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்தியச் சட்டங்கள் தமிழ்மொழியில் பல்வேறு நூல்களாக ஏற்கனவே மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. நீதிமன்ற, நிர்வாக மொழியாக இருக்கும் தகுதியை தமிழ் மொழி ஏற்கனவே அடைந்து விட்ட சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழ் மொழியில் வெளியிட எவ்விதமான தடையும் இல்லை. இந்நிலையில் கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னக மொழிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற உரிய அங்கீகாரம் தமிழ் மொழிக்கு வழங்கப்படாதது இந்திய நீதித்துறையின் பாரபட்சமான நடவடிக்கை.

தமிழ் மொழி பேசி வந்த நாகர்களே இந்தியப்பெருநிலத்தில் மூத்த குடிமக்கள் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட இந்தியாவின் பாரம்பரியமிக்கப் பண்பாட்டின் மூத்த மொழி தமிழ்மொழி எனப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.எம்மொழியின் துணையுமின்றித் தனித்து இயங்கவல்ல பேராற்றல் கொண்ட தன்னிகரில்லா மொழியான தமிழை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடும் மொழிகளின் பட்டியலில் சேர்க்காதிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டங்களில் அதிகப் பங்களிப்பினைச் செய்து இந்நாட்டிற்கு வரி செலுத்தி வாக்கு செலுத்தி இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் தமிழ் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக வன்மம் காட்டி வரும் இந்திய வல்லாதிக்கத்தின் இன்னுமொரு அறிவிப்பாகத் தான் இந்த அறிவிப்பினைக் காண முடிகிறது.

இந்தியாவின் அரசிலமைப்புச்சாசனத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளுள் சிறப்பிடம் வகிக்கும் தமிழ் மொழியினை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படும் பட்டியலில் சேர்க்க வேண்டியது இந்நாட்டின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, தமிழ் மொழிக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்படும் பட்டியலில் தமிழையும் இணைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத் தலைமை நீதியரசரைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com