
காசநோயை விரைந்து குணப்படுத்துவதற்குரிய சிகிச்சை முறைகளைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, நோயாளிகளுக்கு கூடுதல் மருந்துகளை வழங்குவது குறித்தும், ஏற்கெனவே உள்ள மருந்துகளின் வீரியத்தை அதிகரிப்பது குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் வெற்றி பெற்று அவை நடைமுறைக்கு வரும் பட்சத்தில் காசநோயாளிகள் சிகிச்சை பெற வேண்டிய காலம் 6-இல் இருந்து 4 மாதங்களாக குறைய வாய்ப்புள்ளது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் அந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நடவடிக்கைகளில் காசநோய் தாக்கத்துக்கு ஆளான ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, காசநோயாளிகளை அவர்களது உடல்நிலை மற்றும் நோயின் தாக்கத்தை அடிப்படையாக வைத்து வகைப்படுத்தப்படுவது வழக்கம்.
நோய் எதிர்ப்பு மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் உடல் தகுதியைக் கொண்டவர்கள் ஒரு வகை. அவர்கள் 6 மாதங்கள் வரை மருந்துகளை உட்கொண்டாலே காசநோயில் இருந்து முழுமையாக விடுபட முடியும். அதே வேளையில், எதிர்ப்பு மருந்துகள் கொடுத்தும் பலனளிக்காத அளவு நோய்த் தாக்கம் கொண்ட சில நோயாளிகளும் இருப்பார்கள். அவர்கள் 9 முதல் 18 மாதங்கள் வரை மருந்துகள் உட்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் காசநோய்க் கிருமிகள் முழுமையாக அழியும்.
ஆனால், பல நோயாளிகள் ஓரளவு உடல்நலம் தேறியவுடன் மருந்துகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விடுகின்றனர். அவ்வாறு சிகிச்சையை பாதியில் கைவிட்ட லட்சக்கணக்கானோர், ஆண்டுதோறும் காசநோய்த் தாக்கத்துக்கு மீண்டும் ஆளாவதாகவும், அதில் பலர் உயிரிழப்பதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், இப்பிரச்னைக்குத் தீர்வு காண மருத்துவ நிபுணர்களும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் முடிவு செய்தனர். அதுதொடர்பாக ஓர் ஆய்வும் நடத்தப்பட்டது. பல மாத காலத்துக்கு தொடர்ந்து மருந்து உட்கொள்வதற்கு சலிப்படைந்தே சில நோயாளிகள் பாதியில் நிறுத்திக் கொள்கிறார்கள் என்பது அதன் வாயிலாக தெரியவந்தது.
இதையடுத்து, மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய காலத்தை எந்தெந்த வழிகளில் குறைக்கலாம்? என்பது குறித்து தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மருத்துவ ஆய்வியல் துறைத் தலைவர் டாக்டர் மோகன் நடராஜன் கூறியதாவது:
2025-க்குள் காசநோயை வேரறுக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில், தற்போது காசநோய் சிகிச்சைக்கான கால அளவைக் குறைப்பதற்காக வழக்கமாக நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் 4 மருந்துகளுடன் கூடுதலாக ஒரு மருந்தை வழங்கி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மற்றொரு புறம், மருந்தின் வீரியத்தை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுகள் வெற்றியடையும் பட்சத்தில், காசநோயாளிகள் 6 மாதங்கள் மருந்து எடுத்துக் கொள்வதற்கு பதிலாக 4 மாதங்கள் எடுத்துக் கொண்டாலே அந்நோயை குணப்படுத்தக் கூடிய நிலை உருவாகும். அதேபோன்று 18 மாதங்கள் வரை மருந்து உட்கொள்ள வேண்டியவர்கள் 9 மாதங்களுக்கு அவற்றை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
இதைத் தவிர, காசநோயை விரைந்து குணப்படுத்துவதற்காக கண்டறியப்பட்ட புதிய மருந்துகளையும், அந்நோய் பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கான புதிய மருந்துகளையும் ஆய்வுக்குள்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.