
தலைக்கவசம் அணியாமல் காவலர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டினால், நடவடிக்கை எடுக்கும்படி தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்த விவரம்:
தமிழகத்தில் சுமார் 3 கோடி வாகனங்கள் உள்ளன. இதில் சுமார் 2.20 கோடி இருசக்கர வாகனங்கள். மாநிலத்தில் நடைபெறும் இருசக்கர வாகன விபத்துக்களில், தலைக்கவசம் அணியாத காரணத்தினாலேயே அதிகளவு உயிர் இழப்பு ஏற்படுகிறது. இந்த விபத்துக்களில் இறப்பு ஏற்படுவதற்கு 90 சதவீதம் தலைக்கவசம் அணியாததே காரணம் என காவல்துறை கூறுகிறது.
இதனால், மோட்டார் சைக்கிளில் செல்கிறவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவிடப்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறவர் மட்டும் தலைக்கவசம் அணியாமல் வந்தால், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதேவேளையில், மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்து வருகிறவர்கள் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம், வாகனங்களில் பின் இருக்கையில் அமருபவர்களுக்கும் தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பின் இருக்கையில் செல்லுகிறவர்கள் மீதும் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்கின்றனர்.
இந்நிலையில், தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதியாத போலீஸார் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்லுகிறவர்கள் மீது தீவிரமாக வழக்குப் பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், காவலர்கள் இன்னும் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வதாக காவல்துறை உயரகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.
டிஜிபி உத்தரவு: தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரிவு டிஜிபி ஜே.கே.திரிபாதி, அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக டிஐஜி-கள், மண்டல ஐஜி-கள் ஆகியோருக்கு ஒரு உத்தரவை சுற்றறிக்கையாக வியாழக்கிழமை அனுப்பினார்.
அதில், காவலர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும். அதேபோல போக்குவரத்து விதிமுறைகளையும் காவலர்கள் பின்பற்ற வேண்டும். காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டினாலோ, போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலோ அதிகாரிகள், மோட்டார் வாகனச் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
டிஜிபியின் இந்த உத்தரவின் விளைவாக, தலைக்கவசம் அணியாமல் காவலர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்களா என அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டும் காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, அபராதமும் வசூலிக்கப்படுகிறது.