
அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தாராபுரம் அருகே உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
தாராபுரத்தை அடுத்துள்ள இச்சிப்பட்டி பகுதிகளில் பல்வேறு இடங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இச்சிப்பட்டி கிராமத்தில் 4 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் சேனாதிபதி, துரைசாமி ஆகியோரது விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் வியாழக்கிழமை வந்தனர்.
அப்போது, நிலத்திற்காக அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை குறித்த விவரத்தைத் தெரிவிக்காமல் நிலத்தை அளவீடு செய்ய அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி, நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முன்னதாக, கடந்த இரு நாள்களுக்கு முன்பு சம்பவ இடத்துக்கு வந்த பவர் கிரிட் நிறுவன அதிகாரிகள் இந்த இருவரது தோட்டங்களிலும் நிலத்தை அளவீடு செய்துள்ளனர். அப்போது, உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க நிலத்தைக் கொடுத்தால் ரூ. 15 லட்சம் வரையில் இழப்பீட்டுத் தொகை தருவதாக இடைத்தரகர்கள் மூலமாக வாக்குறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், முதல் தவணையாக ரூ.35 ஆயிரம் மட்டுமே கொடுக்க முடியும் என்று பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள், வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனராம்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தங்களது நிலத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க விடமாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித்தனர். எனினும், காவல் துறையினரின் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலமாக விவசாய நிலத்தில் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த தகவல் பரவியதை அடுத்து அங்கு வந்த விவசாயிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குழி தோண்டும் பணியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.