
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மகாமண்டபத்தில் மயில் சிலை சேதமடைந்த விவாகாரம் தொடர்பான வழக்கில், கோயில் கண்காணிப்பாளருக்கு முன்ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர் சந்நிதிக்கு எதிரே நந்தி சிலையும், மகாமண்டபத்தில் மயில் சிலைகள் இரண்டும் உள்ளன. இதில், ஒரு மயில் சிலையின் தலைப்பகுதி சேதமடைந்திருந்தது. கடந்த 2017 ஆகஸ்ட் 6 -ஆம் தேதி அர்த்தஜாம பூஜை முடிந்ததும், கோயில் நடை சார்த்தப்பட்டது. அதன்பின்னர், சிசிடிவி கேமரா செயல்பாடு நிறுத்தப்பட்டு, சேதமடைந்த மயில் சிலைக்கு பதிலாக புதிய மயில் சிலை நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் எதிர்ப்பால் கடந்த 2017 ஆகஸ்ட் 19 -ஆம் தேதி புதிய மயில் சிலை அகற்றப்பட்டு, பழைய மயில் சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு இந்துசமய
அறநிலையத் துறை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கையும் இல்லாததால், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு கோயில் அதிகாரி தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக, திருச்செந்தூர் கோயில் காவல் துறையினர், கோயில் கண்காணிப்பாளர் பத்மநாபன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில், பத்மநாபன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி பி. ராஜமாணிக்கம் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோயில் கண்காணிப்பாளர் பத்மநாபன் திருச்செந்தூர் கோயில் காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டுமெனக் கூறி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.