
கடவுச் சீட்டைப் போல், அகில இந்திய அளவில் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுப் புத்தகத்தை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் சண்முகப்பா தெரிவித்தார்.
நாமக்கல்லில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது; தேசிய அளவில் செல்லும் லாரிகளில், இரண்டு ஓட்டுநர்கள் இருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். தற்போது அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. அதேபோல், நாடு முழுவதும் 12 லட்சம் கிளீனர்கள் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் பேர் உள்ளனர். ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதால், அவர்களால் லாரிகளை இயக்க முடியவில்லை.
எட்டாவது வரை படித்திருந்தால் தான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்பதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினோம். அந்த கோரிக்கையை ஏற்று எட்டாம் வகுப்பு வரை படிக்காவிட்டாலும் ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம். லாரி உரிமையாளர்களுக்கும், மத்திய அரசுக்குமான நெருக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.
காப்பீடு மற்றும் சுங்கச்சாவடிக் கட்டணம் அதிகப்படியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி பலமுறை போராட்டம் நடத்தி விட்டோம். ஒரு முறை செலுத்தும் சுங்கக் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விரைவில் அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. அகில இந்திய அளவில் கடவுச்சீட்டு எவ்வாறு வழங்கப்படுகிறதோ(பாஸ்போர்ட்) அதேபோன்று, ஓட்டுநர் உரிமம்(டிரைவிங் லைசன்ஸ்), வாகனப் பதிவுப் புத்தகம் (ஆர்.சி. புக்) வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளோம். மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வரும்போது இக் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தப் பகுதியிலும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும், போலீஸாரும் லாரிகளை நிறுத்தக் கூடாது என்பதை மோட்டார் வாகனச் சட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும். டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். ஓட்டுநர்களுக்கு ஈ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வேகக் கட்டுப்பாட்டு கருவி என்பது கேரளத்தில் அமலில் உள்ளது. வாகனம் தயாரிக்கும் நிறுவனங்களே 80 கிலோமீட்டர் வேகம் என்ற அடிப்படையில் தயாரித்து விற்கின்றனர். நாடு முழுவதும் இதனை அமல்படுத்தக் கூடாது என்பது தான் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை. இது தொடர்பாகவும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றார்.