
காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட பேரணியாக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
துணை நிலை ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி காரைக்காலில் வியாழக்கிழமை பேரணியாகச்சென்று, தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 141 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெறவேண்டும். முதல்வர் நாராயணசாமி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். இலவச அரிசியை தடையின்றி முறையாக வழங்கவேண்டும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக செயல்படும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும். 100 நாள் வேலையை முழுமையாக வழங்கி,
தினக்கூலியாக ரூ. 280 வழங்கவேண்டும். குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் முன்பாக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். பி.ஆர்.டி.சி. போக்குவரத்துக் கழகத்தை தனியாருக்கு தாரை வார்க்காமல், சிறந்த முறையில் அரசே மேம்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதிய பேருந்து நிலையப் பகுதியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.
கட்சியின் வட்டச் செயலர் எஸ்.எம். தமீம் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் வே.கு. நிலவழகன், அ.வின்சென்ட், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.எம். கலியபெருமாள், அ. திவ்யநாதன், ஜி. துரைசாமி, ஆர். ராமகிருஷ்ணன், என். ராமர், அ. பாக்கியராஜ், ஆர். மகாராணி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்த இப்பேரணிக்கு காவல்துறை அனுமதியளிக்கவில்லை. இருப்பினும், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 141 பேரை போலீஸார் கைது செய்தனர்.