நீதித்துறையின் செயல்பாடுகள் மீது சந்தேகம்: வைகோ மீதான தீர்ப்பு குறித்து சீமான்  கருத்து 

பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென  வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, நாம் தமிழர் கட்சி...
நீதித்துறையின் செயல்பாடுகள் மீது சந்தேகம்: வைகோ மீதான தீர்ப்பு குறித்து சீமான்  கருத்து 

சென்னை: பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய வல்லாதிக்கமும், சிங்களப் பேரினவாதமும் சேர்ந்து ஈழ மண்ணில் நிகழ்த்திய இனப்படுகொலையைக் கண்டித்து, கடந்த 2009ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ‘நான் குற்றஞ்சாட்டுகிறேன்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் மன்மோகன் சிங் தலைமையிலான அப்போதைய காங்கிரசு அரசுதான் ஈழப்போரை நடத்தி மக்களைக் கொன்று குவிக்கிறது எனக் குற்றஞ்சுமத்தி பேசியதற்காக அப்போதைய திமுக அரசு, அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கைப் பாய்ச்சியது. இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகச் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில் தற்போது அண்ணன் வைகோ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற கருத்துரிமையின் மீதான தாக்குதலாகவே நான் கருதுகிறேன்.

இலங்கை அரசுக்குப் பணமும், ஆயுதமும் கொடுத்து ஈழப்போரைப் பின்நின்று நடத்தி திட்டமிட்ட இனப்படுகொலையை நிகழ்த்த முழுக்க முழுக்கத் துணைநின்றது அன்றைய காங்கிரசு – திமுக கூட்டணி அரசு என்பதை உலகறியும். ‘இந்தியா விரும்பியே போரை நடத்தினோம்’ என இனப்படுகொலையாளன் ராஜபக்சேவும், அவனது சகோதரர்களும் இன்றைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த மகத்தான உண்மையைத்தான், அன்றைக்கு உலகுக்கு உரத்துக் கூறியிருக்கிறார் வைகோ. அதற்காகத் தற்போது அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை அளித்திருப்பதை சனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்ட எவராலும் ஏற்க முடியாது.

‘தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது ஒருபோதும் குற்றமாகாது’ என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழக்கொன்றில் தெளிவுப்படுத்தியிருக்கிற சூழலில், தற்போது விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அண்ணன் வைகோவிற்கு தண்டனை வழங்கியிருப்பது ஏற்கனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கின்ற செயல். தங்கள் மீது இனப்படுகொலையின் குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது,அது வரலாற்றின் ஏடுகளில் இருந்து மறைக்கப்பட வேண்டும் என்ற காரணங்களுக்காக அன்றைய காங்கிரஸ் ஆதரவு திமுக அரசு அண்ணன் வைகோ மீது தேசத்துரோக வழக்கினை பதிவு செய்தது.தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதிக்கு எதிராக, லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக, குரல்கொடுக்க, உள்ளத்து உணர்வுகளை வெளிக்காட்டப் பேசுவது எப்படி இந்த நாட்டிற்கு எதிரான தேசத்துரோக குற்றமாகும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இன்னும் சில நாட்களில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க இருக்கிற நிலையில் பல நாட்கள் நிலுவையில் இருந்த இவ்வழக்கில் திடீரென அண்ணன் வைகோவைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிப்பது என்பது நீதித்துறையின் செயல்பாடுகள் மீதான சந்தேகங்களையும் வினாக்களையும் எழுப்புகிறது . ஈழத் தாயகத்தின் விடுதலைக்காக இறுதிவரை களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளை ஆதரித்ததற்காக தேசத்துரோகி எனப்பழி சுமத்தப்பட்டுத் தண்டனைப் பெற்றுள்ள அண்ணன் வைகோ அவர்களுக்கு மேல்முறையீட்டில் நீதி கிடைக்க அவரது கருத்துரிமை சார்ந்த போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி உடனிருக்கும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com