அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் 2.93 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2.93 லட்சம் மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரண நிதி வழங்கப்படும்
அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேரவையில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேரவையில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.


அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட 2.93 லட்சம் மக்காச்சோள விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். 
இதுகுறித்து, சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு அவை விதி 110-ன் கீழ் அவர் படித்தளித்த அறிக்கை:-
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மாறி வரும் பருவநிலை காரணமாக, அமெரிக்காவில் மக்காச்சோளப் பயிரை நாசமாக்கும் அமெரிக்கன் படைப்புழு நமது மாநிலத்திலும் தாக்கியுள்ளது. அனைத்து நிலைகளிலும் பரவி, பெருமளவு சேதத்தை ஏற்படுத்தும் தன்மை உடையது இந்தப் புழு.
2.20 லட்சம் ஹெக்டேர் பாதிப்பு: அமெரிக்கன் படைப்புழுவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டேன். மாநில பேரிடர் நிவாரண நிதியின் வரையறைகளின்படி, படைப்புழு பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வழியில்லை. ஆனாலும், பேரிடர் நிவாரண நிதி வரையறைகளில் சேர்த்து, நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன்.
உரிய பயிர் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் படைப்புழு கடந்த ஆண்டு முதன்முதலாக தாக்கியதால் சாகுபடி செய்யப்பட்ட 3.55 லட்சம் ஹெக்டேரில் 2.20 லட்சம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டது. வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 17 மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளின் துயரத்தைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இறவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500-ம், மானாவாரிப் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410 என்ற விகிதத்தில், மொத்தம் ரூ.186.25 கோடி நிவாரணம் அளிக்கப்படும்.
வேளாண் காப்பீட்டுத் திட்டம்: மக்காச்சோளப் பயிரை சாகுபடி செய்து, அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு விவசாயிகள் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதைத் தவிர, ஏற்கெனவே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து, பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத் தர வேளாண்மைத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். காப்பீட்டுத் திட்டத்தில் இணையாத விவசாயிகளும், பொருளாதார ரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ள உடனடியாக அதில் இணைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com