வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிப்பு

பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது.
வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்த சூழ்நிலையில், திமுக வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 ஆகிய தேதிகளில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில், முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் துரைமுருகனின் நெருங்கிய உறவினரும், திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோன் ஆகியவற்றில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. 
இதையடுத்து, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக வருமான வரித் துறை சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்துவது குறித்து மாநிலத் தேர்தல் அதிகாரியின் பரிந்துரை, வருமான வரித்துறை அறிக்கை, போலீஸார் வழக்குப் பதிவு உள்ளிட்ட அம்சங்களை வைத்து கடந்த ஏப்ரல் மாதம் 16-இல் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். 

ஆலோசனையின் முடிவில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு தேர்தல் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தலின் போது, நாட்டிலேயே வேலூர் தொகுதி தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டது . 

பணப் பட்டுவாடா விவகாரத்தால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, தேர்தல் அறிவிப்பு நடைமுறை ஜூலை 11-இல் வெளியாகும். அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 18, வேட்புமனு பரிசீலனை ஜூலை 19, வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 22, வாக்குப்பதிவு ஆகஸ்ட்  5-ஆம் தேதி நடைபெறும். 

இந்நிலையில், இத்தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com