
சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகள் நம் நாட்டின் பொக்கிஷங்கள் என டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேசினார்.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும், ஆரோக்கிய சித்த மருத்துவமனையும் இணைந்து "நலந்தானா-நலம் நம் கையில்' என்ற தலைப்பில் கோவையில் ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை தொடர் மருத்துவக் கருத்தரங்கை நடத்தின.
இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி கிக்கானி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுதா சேஷய்யன் பேசியதாவது:
தொழில்நுட்பத்தின் வசதிகள் பெருக, பெருக மக்களிடம் உள்ள அறியாமையும் பெருகி வருகிறது. அனைவரும் இணையதளங்கள் மூலம் மருத்துவம் குறித்து அரைகுறையாகத் தெரிந்து கொண்டு தங்களைத் தாங்களே மருத்துவராக எண்ணி பரிசோதனைகள் செய்து கொள்கின்றனர்.
இது மிகவும் ஆபத்தான போக்கு. ஒவ்வொரு உடலமைப்பும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒருவருக்கு ஒத்துப்போகும் மருந்துகள் மற்றொருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கடும் தவம் புரிந்த யோகிகள் பலர் கூட நோய்வாய்ப்பட்டதுண்டு. ஆனால், அவர்கள் அதைக் கண்டு அஞ்சாமல் தைரியமாக எதிர்கொண்டனர்.
தற்காலச் சூழல்களில் நோய்கள் வராமல் இருப்பதைத் தடுக்க இயலாது. ஆனால், நோய்கள் வந்தால் அவற்றை எதிர்கொள்ளக்கூடிய ஆன்ம பலத்தை நாம் அதிகரித்துக்கொள்ள முடியும்.
இதற்கு அனைவரும் யோகா, தியானம் போன்றப் பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம். நல்ல பழக்கவழக்கங்களை முதியோர் பலர் கைவிட்டுவிட்டனர். நம் முன்னோர் பின்பற்றிய பல நல்ல பழக்கங்களை நாம் பின்பற்றுவதில்லை. அது இன்றைய சமூகத்தில் பல மாற்றங்களையும் பிரச்னைகளையும் கொண்டு வந்துவிட்டன.
மனச் சோர்வு இல்லாமல் இருப்பவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுவர். தற்போது பலவிதமான பிரதான நோய்களுக்கு காரணம் மன ரீதியான பிரச்னைகள்தான். மன சோர்வு இருந்தால் ஆஸ்துமா, குடல்புண், வயிற்றுப் புண் ஆகியவை அதிகரிக்கும். மன சோர்வு இல்லாமல் இருக்க ஆன்மாவை சமநிலையில் வைத்திருப்பது அவசியம். எல்லா நாடுகளுக்கும் ஒரே மருத்துவ முறை பொருந்தும் என்பது தவறான கண்ணோட்டம்.
ஒரு நாட்டின் தட்பவெட்பநிலைக்கு ஏற்ற மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதுபோல நம் நாட்டுக்கு உகந்தது சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகள். இவை நம் தேசத்தின் பெருமிதங்கள். ஆரோக்கியம், நோய்கள் குறித்த விழிப்புணர்வை சிறுவர்களுக்கும் ஏற்படுத்துவது இக்காலத்தில் கட்டாயமானது என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் பேசுகையில், மேற்கத்திய மருத்துவ முறைகள் 500 ஆண்டுகளுக்கு முன்புதான் பயன்பாட்டுக்கு வந்தன.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் தனக்கே உரிய பாரம்பரிய மருத்துவ முறைகளைக் கொண்டுள்ளது. நமது பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் என்றார்.