
செங்கல்பட்டு தடுப்பூசி பூங்காவை உற்பத்தி தொடங்கும் முன்பே மூடிவிட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் தடுப்பூசிகள் தேவையை, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு பாமக-வின் அன்புமணி மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, அறிமுகம் செய்யப்பட்டு அமைக்கப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்காவை மூட முயற்சிகள் நடப்பதாக வெளிவரும் செய்திகள் கடும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் தருகின்றன.
இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டபோது, ரூ.594 கோடியில் செயல்படுத்தி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இத்திட்டத்தின் மதிப்பு இப்போது ரூ. 904 கோடியாக அதிகரித்தது.
இந்த உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டின்படி கூடுதலாக வழங்க வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்தால் செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து வளாகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்கி விட முடியும். ஆனால், உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்றும், அவ்வளவு முதலீட்டில் தடுப்பூசி பூங்காவை அமைத்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறி விட்டதாகத் தெரிகிறது.
அதைத் தொடர்ந்து தடுப்பூசிபூங்காவில் பணியாற்றி வரும் 174 பணியாளர்களை, வேறு வேலையைப் பார்த்துக் கொள்ளும்படி நிர்வாகம் கூறியிருக்கிறது. தடுப்பூசி உற்பத்திப் பூங்காவை அதன் உயர்த்தப்பட்ட மதிப்பீட்டில் திறந்தால், அதை லாபத்தில் இயக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த பூங்கா திறக்கப்பட்டால் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 7 வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உள்நாட்டிலேயே உறுபத்தி செய்யப்படுவதால், மத்திய அரசுக்கு பெருமளவில் செலவு மிச்சமாகும்.
எனவே, இந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்காவை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
ஒருவேளை இது மத்திய அரசால் சாத்தியமாகாத நிலையில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை வாங்கியது போன்று, அதிக லாபம் ஈட்டக்கூடிய தடுப்பூசி பூங்காவையும் தமிழக அரசு வாங்கி நடத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.