
இந்து முன்னணி அமைப்பின் மாநில மாநாடு 2020 ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அமைந்துள்ள திருமலை-திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சுவாமி தரிசனத்தை அடுத்து நிருபர்களிடம் அவர் கூறியது:
இந்து ஆலயங்களை விட்டு அரசு வெளியேற வேண்டும். ஆலய சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் போராட்டங்கள் வெற்றி பெற நூற்றாண்டுகள் ஆகும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 14-ஆம் தேதி மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு அருகில் கட்டப்படும் கிறிஸ்தவ ஆலயம், வேணுகோபால் கமிஷன் பரிந்துரைக்கு எதிராகக் கட்டப்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு தலையிட்டு அதைத் தடுக்க வேண்டும். இந்து முன்னணியின் மாநில மாநாடு 2020 ஜூன் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது. இதில் சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர் என்றார்.