அரசுப் பேருந்தில் ஹிந்தி வாசகம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

அரசுப் பேருந்தில் இடம்பெற்ற ஹிந்தி வாசகங்கள் குறித்து போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.
அரசுப் பேருந்தில் ஹிந்தி வாசகம்: போக்குவரத்துத் துறை விளக்கம்

அரசுப் பேருந்தில் இடம்பெற்ற ஹிந்தி வாசகங்கள் குறித்து போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. 
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் பயன்பாட்டுக்காக, ரூ.158 கோடி மதிப்பீட்டில் 500 புதிய பேருந்துகளின் இயக்கத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமைத் தொடக்கி வைத்தார். 
இந்த 500 பேருந்துகளில், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்துக்கு 10 பேருந்துகளும், சேலத்துக்கு 20 பேருந்துகளும், கோவைக்கு 30 பேருந்துகளும், கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 110 பேருந்துகளும், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு 50 பேருந்துகளும், திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு 30 பேருந்துகளும் வழங்கப்பட்டன. 
இவ்வாறு வழங்கப்பட்ட பேருந்துகளில் அவசரகால வழி, தீயணைப்பான் கருவி உள்ளிட்டவற்றை குறிப்பிடும் வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இடம்பெற்று இருந்தன. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 
விளக்கம்: இந்த நிலையில், ஹிந்தி வாசகங்கள் இடம்பெற்றதற்கான காரணம் குறித்து போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதிதாக வாங்கப்பட்டு இயக்கப்படும் பேருந்துகளானது, தேசிய அளவிலான நிறுவனங்களான 'ASRTU' and 'ARAI'  ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படியே பேருந்துகளின் கட்டுமானங்களும், கூண்டுகளும் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில், பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதுவாக இரு புறங்களிலும் அவசரகால வழிகள் (Emergency Exits) அமைக்கப்பட்டு உள்ளன. இதனை, பயணிகள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து வகையான அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படுவதோடு, பார்த்தவுடன் எளிதில் அறிந்து கொள்கின்ற வகையில் வழிகாட்டி ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்காக அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பேருந்தில், இந்த அவசரகால வழிக்காக (Emergency Exits) ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரில் ஆங்கிலத்தோடு, ஹிந்தி மொழியிலும் எழுதப்பட்டு இருப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு, அது உடனடியாக சரிசெய்யப்பட்டு உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com