Enable Javscript for better performance
நீட் தேர்வு விவகாரம்: நல்ல தீர்வு எட்டப்படும்- முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி- Dinamani

சுடச்சுட

  

  நீட் தேர்வு விவகாரம்: நல்ல தீர்வு எட்டப்படும்- முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

  By DIN  |   Published on : 09th July 2019 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CM3


  நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் கருத்தைப் பெற்று நல்ல தீர்வு எட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 
   நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாக்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தை பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை எழுப்பினார். அப்போது நடந்த விவாதம்:-
  மு.க.ஸ்டாலின்: நீட் விலக்கு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தாருங்கள் என்று மத்திய அரசை சட்டப் பேரவை மூலமாகவும்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மூலமாகவும் கேட்டுக் கொண்டிருந்தோம். அனைத்துக்கும் மெளனம் சாதித்த பாஜக அரசு இப்பொழுது திடீரென்று உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தமிழக நீட் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன என்ற ஒரு திடீர் அறிவிப்பை தெரிவித்துள்ளது. எனவே, இது தமிழகத்தை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மசோதாக்களை நிராகரித்தது குறித்த தகவலைக்கூட மாநில சட்டப்பேரவைக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை கண்ணியம் கூட காணாமல் போயிருக்கிறது.  மத்திய அரசின் இந்த விநோதமான செயல் மிக மிக கண்டனத்துக்குரியது. 
  எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடிய மசோதாக்கள் இரண்டுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தி இந்த அவையில் ஏகமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். சட்டப் பேரவையின் சட்டமியற்றும் உயர்ந்த அதிகாரத்தை, சாதாரணமாக சிறுமைப்படுத்தி தமிழக மக்களின் உணர்வுகளுக்கு அவமானம் செய்திருக்கக்கூடிய மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வந்து இந்த அவையில் ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டும். சட்டப் பேரவைக்கு இருக்கக்கூடிய இறையாண்மையைப் பாதுகாத்திட உச்ச நீதிமன்றத்தையும் அணுக வேண்டும். 
  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: ஒரு மாநில அரசானது மத்திய அரசை எதிர்த்து கண்டனத் தீர்மானம் இயற்றுவது என்பது சரியாக இருக்காது. அதேசமயம், இந்தப் பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
  மு.க.ஸ்டாலின்: மத்திய அரசைக் கண்டித்து  தீர்மானம் போட முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். வற்புறுத்தியாவது ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு இந்த அரசு முன்வருமா?
  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நீட் மசோதா தொடர்பாக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி தமிழக அரசு நல்ல முடிவை எடுக்கும். அப்போதாவது, நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வாதிடாமல் இருந்தால் நாட்டுக்கு நல்லது.
  சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம்: தமிழக அரசு அனுப்பிய மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவே கடந்த 2017-இல் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், நிறுத்தி வைத்ததற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையின் சார்புச் செயலாளரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக  செய்திகள் வந்துள்ளன. எதற்காக நிராகரிக்கப்பட்டது என்ற தகவல் தெரியவில்லை.
  இந்த மசோதாக்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்து மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வலியுறுத்த வாய்ப்புள்ளது. கண்டனத் தீர்மானம் போடுவதால் எந்தப் பயனும் இல்லை.
  எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: கண்டனத் தீர்மானம் இல்லாவிட்டாலும், வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதனால் என்ன பாதிப்பு வந்து விடப்போகிறது?
  முதல்வர் பழனிசாமி: நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல தீர்வு காண்பதற்கு தமிழக அரசு முயற்சிக்கும்.
  மு.க.ஸ்டாலின்: மத்திய அரசை வலியுறுத்தி நடப்பு சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai