கேள்விக்குறிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி: மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்பு மனு ஏற்பு

பல்வேறு கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வேட்பு மனு ஏற்பட்டது. இதனால் மதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேள்விக்குறிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி: மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்பு மனு ஏற்பு


சென்னை: பல்வேறு கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநிலங்களவைத் தேர்தலில் மதிமுக பொதுச் செயலர் வைகோவின் வேட்பு மனு ஏற்பட்டது. இதனால் மதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விகளுக்கு விடைக் கிடைத்துவிட்டது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் வைகோவை தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு இல்லை என சட்ட நிபுணர்கள் கூறினாலும், தேசத் துரோக வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றிருக்கும் இவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கருத்து நிலவின.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், அதிமுகவுக்கு 3 இடங்களும், திமுகவுக்கு 3 இடங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

திமுகவின் 3 இடங்களில் ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. மதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். திமுகவின் சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகமும், மூத்த வழக்குரைஞர் வில்சனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து தமிழக தலைமைச் செயலகத்துக்கு சனிக்கிழமை வந்த மூவரும், சட்டப்பேரவைச் செயலரிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

வைகோ வேட்புமனு ஏற்பு
மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு திங்கள்கிழமை (ஜூலை 8) கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 9-ஆம் தேதி நடைபெற்றது.

வேட்புமனு தாக்கல் செய்துள்ள வைகோ மீது, திமுக ஆட்சிக் காலத்தில் 2009 -ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கை விசாரித்து வந்த சென்னை சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் வைகோ குற்றவாளி என உறுதி செய்ததுடன் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக, அவர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது, கருத்து தெரிவித்த சட்ட நிபுணர்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வைகோவுக்கு எந்தத் தடையும் இல்லை என்றனர். அதற்கு ஏற்ப வைகோவும் தனது வேட்பு மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், தேசத் துரோக வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஒரு நபர், எவ்வாறு தேசத்தின் நலனையும், வளர்ச்சியையும் காப்பேன் என உறுதிமொழியேற்று நாடாளுமன்றத்துக்குச் செல்ல முடியும். எனவே, சட்டத்தின் அடிப்படையில், தேர்தலில் போட்டியிட அவருக்குத் தகுதி உள்ளது என்றபோதும், அவருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக சில மூத்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதுபோன்ற ஒரு காரசார விவாதங்கள் நடந்து வந்த நிலையில் வைகோவின் வேட்பு மனுவை ஏற்பதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com