கனிமொழி வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை செளந்தரராஜன் மனு

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில்
கனிமொழி வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழிசை செளந்தரராஜன் மனு


தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார். 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை செளந்தரராஜன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் நானும் போட்டியிட்டோம். கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
 இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்தன. 
அவரது வேட்புமனு முறையாக தாக்கல் செய்யப்படவில்லை. கனிமொழி தனது கணவர், மகன் ஆகியோரை சிங்கப்பூர் குடிமக்கள் எனவும், அவர்களது வருமான விவரங்களைக் குறிப்பிடத் தேவையில்லையென்றும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். 
ஆனால் இவர்களுக்கு சிங்கப்பூர் அரசு வழங்கியிருந்த குடிமக்கள் பதிவுச் சான்றிதழை வேட்புமனுவுடன் இணைக்கவில்லை. இதன் காரணமாக வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது, கனிமொழி வேட்புமனு குறித்து எதிர்ப்பு தெரிவித்ததோடு, கனிமொழியின் வேட்புமனுவை நிராகரிக்கக் 
கோரினேன். 
ஆனால், எனது கோரிக்கையை தேர்தல் அதிகாரி ஏற்கவில்லை. மேலும் தேர்தல் பரப்புரையின்போது கனிமொழிக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதுதொடர்பான விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவின. 
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவே, கனிமொழி பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். 
தேனி தொகுதி:  தேனி மக்களவைத் தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தேனி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் மிளானி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 
அந்த மனுவில், ரவீந்திரநாத்குமார், வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்தும், முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார். 
எனவே, அவர் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த இரண்டு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com