சரணடைய விலக்குக் கோரும் சரவண பவன் உரிமையாளரின் மனு மீது இன்று விசாரணை

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவண பவன் உணவக உரிமையாளர் பி. ராஜகோபால்
சரணடைய விலக்குக் கோரும் சரவண பவன் உரிமையாளரின் மனு மீது இன்று விசாரணை


ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரவண பவன் உணவக உரிமையாளர் பி. ராஜகோபால் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தொடர்பாக நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்து விலக்குக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) விசாரிக்கவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009, மார்ச் 19-இல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பி. ராஜகோபால், பட்டுராஜன், டேனியல், தமிழ்ச் செல்வம், கார்மேகம், ஜனார்தனன் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, எம்.எம். சந்தானகெளடர், இந்திரா பானர்ஜி ஆகியோர் கடந்த மார்ச் 29-இல் தீர்ப்பளித்தனர்.
அதில், சாந்தகுமாரைக் கழுத்து நெரித்து கொலை செய்து டைகர் - சோலா பகுதியில் வீசியது தொடர்பாக அரசுத் தரப்பு அனைத்து நிலையிலும் நிரூபித்துள்ளது. கொலை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டதாகவோ, மிகைப்படுத்தப்பட்டதாகவோ இல்லை. வயது மூப்பைக் காரணம் காட்டி எந்தவொரு குற்றவாளியும் தப்பித்துக் கொள்ள முடியாது. 
இந்த வழக்கில் உண்மைகள், சூழ்நிலைகள், ஆதாரங்கள் ஆகிவற்றை ஆராயும் போது, விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் அரசுத் தரப்பின் வழக்கை முழுமையாக விசாரித்து அதனடிப்படையில் தீர்ப்பு அளித்திருப்பது நிரூபணமாகிறது. ஆகவே, இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக சரணடைய ராஜகோபால் சார்பில் கோரப்பட்ட அவகாசத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஜூலை 7-க்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு தெரிவித்தனர். 
இந்நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி சரணடைவதிலிருந்து விலக்குக் கோரி ராஜகோபால் சார்பிலும், தண்டனை காலத்தில் திருத்தம் செய்யக் கோரி ஜனர்தன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஐஸ்வர்யா பாட்டீ ஆஜராகி, வழக்கில் ஆஜராக இருந்த மற்றொரு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வேறொரு வழக்கில் இருப்பதால், சற்று நேரம் விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com