நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்!: திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் திங்கள்கிழமை தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து விலக்கு அளிக்கக் கோரும் விவகாரத்தை எழுப்பினர். அப்போது, மக்களவையிலும்,
நாடாளுமன்றத்தில் நீட் விவகாரத்தை எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்!: திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் வெளிநடப்பு

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் திங்கள்கிழமை தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து விலக்கு அளிக்கக் கோரும் விவகாரத்தை எழுப்பினர். அப்போது, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் திங்கள்கிழமை நண்பகலுக்குப் பிறகு முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பிறகு, இந்த விவகாரத்தை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு எழுப்பிப் பேசுகையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் இரு மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் 2017-இல் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 27 மாதங்கள் ஆகியும் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு காரணமாக மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா? மத்திய அரசால் ஆளப்படுகிறோமா? அரசிடமிருந்து பதில் வேண்டும். மத்திய அரசு பதில் அளிக்கவில்லை எனில் நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றார். இதையடுத்து, அவரும், கனிமொழி, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தயாநிதி மாறன் உள்ளிட்ட அக்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். 
மாநிலங்களவையில்..: மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் பூஜ்ய நேரத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் எழுப்பினர். மாநிலங்களவை அதிமுக குழுத் தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேசுகையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.அந்த மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில், அந்த இரு மசோதாக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்துவிட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு அளித்த அறிவுரையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டிய தேவையில்லை என்பது என் கருத்து. காங்கிரஸும், பாஜகவும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரியாகவே செயல்படுகின்றன. தமிழக சட்டப்பேரவையால் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் அல்லது மத்திய அரசின் செயல் சட்டவிரோதமானகும். எனவே, நீட் தேர்வை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என்றார்.
திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்களை மாணவர்கள் பெறும்போது நீட் தேர்வு தேவையில்லாத ஒன்று. மேலும், சிபிஎஸ்இ பாட முறையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள்தான் தேர்வை எழுத முடியும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், இத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் கூட்டாட்சி உணர்வுக்கு எதிரானது. இதனால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறியவாறு திருச்சி சிவா மற்றும் திமுக உறுப்பினர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி ஆகியோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர். இதனிடையே, திருச்சி சிவா எழுப்பிய கோரிக்கையை ஆதரித்து அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த், கே.ஆர். அர்ஜுனன், ஏ. விஜயக்குமார் உள்ளிட்டோர் கைகளை உயர்த்தினர்.
 நாடாளுமன்றத்திற்கு வெளியே இதுகுறித்து டி.கே. ரங்கராஜன் தினமணியிடம் கூறுகையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக சட்டப் பேரவையில் இருமுறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஏற்கெனவே இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் நான் வழக்குத் தொடுத்தேன். இந்நிலையில், அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதன் மூலம் கூட்டுறவு கூட்டாட்சிக்கு மதிப்பு அளிக்காதது வேதனையாக உள்ளது. மேலும், மத்திய அரசுக்கு மாநிலங்களின் கருத்துகளைப் புரிந்து கொள்வதிலும், தெரிந்து கொள்வதிலும் அக்கறை இல்லை என்பது தெரிகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com